
நாக்பூரில் தைப்பூச விழா
படங்கள், கட்டுரை: ஜெயஸ்ரீ சாரி, நாக்பூர்
தமிழகர்கள் இருக்குமிடமெல்லாம் தமிழ் கடவுளான வேலவனின் புகழும் ஒலித்துக் கொண்டிருக்கும். நாக்பூரில் கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், தன் 52-வது தைப்பூச பூஜை திருவிழாவை நான்கு நாட்கள் விழாவாக குஜராத்தி பவனில் கொண்டாடி வருகிறது.
தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர்.
வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கார்த்திகேய ஸ்வாமி பக்த சமாஜ், கூறுகையில் நாக்பூர் பக்தர்களின் பேராதரவோடு இந்த வருட தைப்பூச திருவிழா புதன்கிழமையில் இருந்து தொடங்கியது.
முதல் நாள் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற தேக்கடி கணேஷ் மந்திரில் மஹாகணபதி யாகத்துடன் தொடங்கியது. குஜராத்தி பவனில் சக்திவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. உள்ளூர் கலைஞர்களின் கலை நிகழ்ச்சியும், பரதநாட்டியமும் மாலை நடைபெற்றது. சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பானது.

தைப்பூசமான இன்று 30 பெண்கள் பால்குடம் எடுத்தனர். சக்திவேலாக பாவிக்கப்பட்ட இறைவனுக்கு ருத்ராபிஷேகமும் பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமலை கண்ணன் (சென்னை) திருப்புகழ் பற்றி தன் ஆன்மீக உரையை நிகழ்த்தினார்.
முருகப் பெருமானின் ‘ வேலாயுதத்தின் மகிமையை’ பல மேற்கோள்களைக் காட்டி விளக்கினார். லட்சார்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்று, மகாபிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது,” என்றார்.

சரஸ்வதி ரெங்கநாதன் மற்றும் அவரது குழுவினர் பஜன்களை பாடினர். மாலை 7 மணி அளவில் பத்ம பூஷன் லேட் P. S. நாராயண ஸ்வாமியின் சிஷ்யரான B. ஜெய்ராம் அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
A.ஹரிபாபு நாயுடு, தலைவர், நிர்மலா மணி, துணைத்தலைவர், வழக்கறிஞர் G. பாலசுப்ரமணியன், செயலாளர், கோமதி மணியன், இணை செயலாளர், M.H.சுப்ரமணியன், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் B. ராஜேஸ்வரி, ராமன் ஐயர், V. ராமசந்திரன், C. கிருஷ்ணகுமார், K. சுஜாதா, S. வெங்கடேஷ், R.R. முதலியார் மற்றும் இளைஞர்களின் முயற்சியால் தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
நாக்பூர் பக்தர்களும் அரசின் வழிமுறைகளை பின்பற்றி விழாவில் பங்கேற்கின்றனர். மூன்றாம் நாளான நாளை ஷண்முகா யாகம், விளக்கு பூஜை, வள்ளி கல்யாண மஹோத்சவம் நடைபெற உள்ளது.