fire in forest - 2026

நாகரஹோளே வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக 20 ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் நாசமாகி உள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

சாம்ராஜ்நகர் தாலுகா, பந்திப்பூர் தேசிய வனப்பகுதியை ஒட்டியுள்ள நாகரஹோளே புலிகள் சரணாலய பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென பரவி கோபாலசுவாமி மலை, குளகி ஆகிய வனப்பகுதியில் பரவியது. அதை தொடர்ந்து மத்தூரு, குந்தகெரே, பேடுகுளி ஆகிய வனப்பகுதிகளிலும் தீ பற்றிக்கொண்டது.

இது குறித்த தகவல் மாவட்ட வனப்பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் வந்துபார்த்து, உடனடியாக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார்.

சுமார் 38 வாகனங்களில் வந்த 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வனப்பகுதியில் காற்று பலமாக வீசுவதாலும், இலையுதிர் காலம் என்பதாலும் மரம், செடிகளில் இருந்து இலைகள் உலர்ந்து கீழே விழுந்திருப்பதாலும் தீ வேகமாக பரவி சுமார் 20 ஹெக்டேர் அளவில் வனப்பகுதியை நாசம் செய்துள்ளதாக வனபாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!

இது இயற்கையாக ஏற்பட்ட தீ விபத்தல்ல. யாரோ விஷமிகள் தீ வைத்துள்ளனர். அவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தீ விபத்து காரணமாக வனப்பகுதியில் மான், நரி, பாம்பு உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள், ஊர்வனங்கள் உயிரிழந்துள்ளன என தெரியவருகிறது. தொடர்ந்து தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending