
தெலுங்கானாவில் மருமகளை கட்டிப்பிடித்து கொரோனாவை ஒட்ட வைத்துவிட்டு அதையே காரணமாக சொல்லி அவரை வீட்டை விட்டே துரத்திய மாமியாரின் கொடுமை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலுங்கானாவின் ராஜன்னா சர்சில்லா மாவட்டம் திம்மாபூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் அந்த பெண் வீட்டில் சும்மா இருக்காமல் மருமகளையும் அவரது குழந்தைகளையும் அடிக்கடி கட்டிப் பிடித்தபடியே பேசி வந்திருக்கிறார்.
இதனால் மருமகளுக்கும் அவரது குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது.

இதனையடுத்து கொரோனா வந்த மருமகளுக்கு இனி வீட்டில் இடம்கிடையாது என அவரது பெற்றோர் வீட்டுக்கு மாமியார் அடித்து துரத்தியிருக்கிறார்.
ஒடிஷாவில் ஒப்பந்த வேலைபார்த்து வந்த மகனிடம் இந்த தகவலை சொல்லி இருக்கிறார் அந்த பெண். மனைவியை வீட்டை விட்டு துரத்திய தாயை கண்டிக்காமல் மகனும் இருந்துள்ளார்.
இது தொடர்பாக தற்போது போலீசில் அந்த மருமகள் புகார் கொடுத்திருக்கிறார். அந்த புகாரில், மாமியார் திடீரென பாசத்துடன் கட்டிபிடிக்கிறாரே என நினைத்தேன். ஆனால் அவருக்கு வந்த கொரோனா எங்களுக்கும் வர வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன்தான் இவ்வாறு அடிக்கடி செய்திருக்கிறார் என்பது பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.
இப்போது கொரோனாவை காரணம் காட்டியே வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்துள்ளோம். மாமியார் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன் மாமியாரின் இந்த கொடூர புத்தி தொடர்பாக அந்த பெண் பேசும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.