
தென்மேற்கு பருவ மழை இன்று கேரளத்தில் தொடங்குகிறது. இதையொட்டி, ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ காற்று மே 21ல் வீசத் துவங்கியது. இதை தொடர்ந்து, மே 31ல், கேரளாவில் பருவ மழை பெய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வானிலை ஆய்வு மையம் கணித்த தேதியில் கேரளத்தில் மழை தொடங்கவில்லை.
இந்நிலையில், இன்று கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கும் என மறு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இதன் காரணத்தால், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் என மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். மற்ற உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் இரண்டு நாட்களுக்கு, தேனி, திண்டுக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 42, மதுரை, வேலுாரில் 41 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. சென்னை மற்றும் சேலத்தில் 38, கோவை மற்றும் புதுச்சேரியில் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.