
சினிமா மற்றும் நாடக நடிகரான மங்கலநாத குருக்கள் இறந்துவிட்டதாக கூறி இறுதிச் சடங்கிற்கு பணம் வசூல் செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா என்றாலே குருக்களாக வருபவர் மங்களநாத குருக்கள். இவரை தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. பல திரைப்படங்களில் திருமணம் செய்து வைப்பராக வருபவர் இவர். அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
சினிமா பூஜை, நிகழ்ச்சிகள் என அனைத்து விதமான பூஜைகளிலும் பங்கேற்று வருகிறார் இவர். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக விஷமிகள் சிலர் திடீர் புரளியை கிளப்பிவிட்டுள்ளனர்.
மங்களநாத குருக்களும் அவர் மனைவியும் கொரோனா தொற்றால் இறந்துவிட்டனர் என்று முகநூலில் பதிவிட்டு, அவர்களை அடக்கம் செய்ய பணம் வேண்டும் என கேட்டிருந்தனர்.
இதைப்பார்த்த சிலர் மங்களநாத குருக்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் பின்னர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த மோசடி பற்றி அவர் சென்னை மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
அதில் சிலர் தாம் இறந்துவிட்டதாக கூறி தலைக்கு ரூ.2,500 வசூலிக்கின்றனர் என்றும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.