தீமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட இளைஞரை சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக, மத்திய சிறைக் கண்காணிப்பாளர் உள்பட 3 அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பழங்குடியினப் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டு, தீமாபுர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபரீத் கான் என்பவரை, சிறைக்குள் புகுந்து பொதுமக்கள் தாக்கினர். இதில் அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, தலைநகர் கோஹிமாவில், முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பணியிடை நீக்கம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டன. ஃபரீத் கான் தாக்கப்பட்ட விவகாரத்தில், நிலைமையைக் கட்டுப்படுத்த தவறியதாக, மத்திய சிறை கண்காணிப்பாளர் சுபா போம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மெரன் ஜாமிர், மாவட்ட ஆட்சியர் வஜோப் கென்யி ஆகிய மூவரையும் பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்தத் தாக்குதலில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வெப்ரசா நைகா தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் டி.ஆர்.ஜீலியாங் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வகுப்புக் கலவரமாக மாறியுள்ளது. இரு மாநிலங்களில் இந்தச் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Popular Categories



