
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கெனவே 3 ஒரு நாள் போட்டிகளில் 2-1 என இந்திய அணி தொடரை வென்றது.
இந்நிலையில் இன்று முதல் டி20 போட்டி, பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சூர்ய குமார் யாதவ் 34 பந்துகளில் 50 ரன் எடுத்தார். ஷிகர் தவான் 36 பந்துகளில் 46 ரன் எடுத்தார். சஞ்சு சாம்சன் 20 பந்தில் 27 ரன் எடுத்தார். இலங்கை தரப்பில் சமீரா, ஹசரங்கா தலா 2 விக்கெட்களும் கருணரத்ன ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 165 ரன் என்ற வெற்றி இலக்குடன் ஆடத் தொடங்கிய இலங்கை அணி, 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 126 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அசலங்கா 26 பந்தில் 44 ரன் எடுத்தார். அவிஷ்கா ஃபெர்னாண்டோ 23 பந்தில் 26 ரன்னும் டசன் ஷனகா 14 பந்தில் 16 ரன்னும் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டும் தீபக் சகார் 2 விக்கெட்டும் க்ருனால் பாண்ட்யா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
22 ரன் விட்டுக் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்.