
புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வரும் அந்த இளம்பெண், கணவனின் கொடுமை தாங்காமல் போலீசிடம் புகார் கொடுக்கலாம் என்று சென்று இருக்கிறார். ஆனால், ஏண்டா புகார் கொடுக்க சென்றோம் என்ற நிலைமைக்கு சென்றிருக்கிறார்.
லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்றிருக்கிறார் அந்த இளம்பெண். அங்கே இருந்த போலீஸ் ஏட்டுவிடம் தன் கணவர் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துகிறார். அவரை தட்டிக் கேட்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்து அந்த இளம் பெண்ணை உட்கார வைத்து, உன்னை ஏன் கணவர் தினமும் அடிக்கிறார் ? உன்னை ஏன் அவருக்கு பிடிக்கவில்லை? அவர் உன்னை வெறுக்கும் அளவிற்கு என்ன நடந்தது? என்று துருவித்துருவி விசாரணை செய்து இருக்கிறார்.
இளம்பெண் விவரமாக சொல்லச் சொல்ல , அந்த ஏட்டு அந்தப் பெண்ணின் அங்கங்களையே அதிகம் ரசித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எதற்காக அப்படிப்பட்ட கணவனுடன் நீ வாழ நினைக்கிறாய். பேசாமல் நீ என்னுடன் வந்து விடு. உன்னை ராணி மாதிரி வைத்து நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லவும், அந்த இளம்பெண் அதிர்ந்து போயிருக்கிறார்.
ஆனாலும் சுதாரித்துக்கொண்டு, இல்லை இல்லை நீங்கள் என் கணவரிடம் பேசி அவரை கண்டித்து வைத்து என்னுடன் நல்லபடியாக வாழச் செய்தால் போதும் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால் மீண்டும் மீண்டும் அந்த இளம்பெண்ணை தன் வலையில் விழும்படி மூளைச்சலவை செய்து இருக்கிறார். இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல் கையை பிசைந்த அந்த இளம்பெண்ணை, சரி வா எனக்கு மசாஜ் பண்ணி விடு என்று சொல்லவும்,
அதிர்ந்து போன அந்தப் பெண் அப்படியே உட்கார்ந்திருக்கவும், பாலியல் சில்மிஷத்தில் ஈடிபட்டுள்ளார். உடனே அவரை தள்ளிவிட்டு, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்.
அதன் பின்னர் தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக உயரதிகாரிகளிடம், புகார் கொடுக்க போன இடத்தில் ஏட்டு தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து புகார் அளித்திருக்கிறார்.
இந்த விவகாரம் பெரிதாவதற்குள் அந்த போலீஸ் ஏட்டு அதிரடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.