லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் வழக்குரைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் குண்டடி பட்டு காயமடைந்தார். இதில், தாக்குதலில் இருந்து தப்பிக்க, தற்காப்புக்காக அவர் தனது துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் போலீஸார் மீதும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அந்தப் பகுதி கலவர பூமியானது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வழக்கறிஞர் ரோஷன் அகமது என்றும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் பெரோஸ் நபி என்றும் தெரிய வந்துள்ளது. நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணி அளவில் இந்தச் சம்பவம் நடந்தது. அதையடுத்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும் 5 கி.மீ. தொலைவில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்ற பகுதியிலும் வழக்கறிஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கட்டடங்களை சேதப்படுத்தி தீவைத்தனர். போலீஸார் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அலகாபாத்-கான்பூர் நெடுஞ்சாலையில் மறியல் நடத்தி போக்குவரத்தை தடுத்தனர். காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு சொந்தமான வாகனங்களுக்கும் தீவைத்தனர். உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் நேரில் வந்து சமாதானம் செய்தனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று, நிலைமையை நேரில் கண்டறிவதாக வழக்குரைஞர்களிடம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி அளித்தனர். பிறகுதான் உயர் நீதிமன்றத்தில் போராட்டம் தணிந்தது.
உ.பி., நீதிமன்ற வளாகத்தில் காவல் உதவி ஆய்வாளரால் வழக்குரைஞர் சுட்டுக் கொலை
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

