
27 வயதான ஆர்எஸ்எஸ் பிரமுகர் சஞ்சித் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் நபர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் கொலையில் நேரடியாக ஈடுபட்டவர் எனவும், அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் SDPI (PFI இன் கிளை) மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புகளைச் சேர்ந்த, இந்தக் கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களின் இருப்பிடம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் திங்கள்கிழமை 3 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் சுபைர், சலாம் மற்றும் இசஹாக் என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருந்தது.
கேரளாவின் பாலக்காடு எலப்புள்ளியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுக் சஞ்சித் என்பவர் நவம்பர் 15ஆம் தேதி அவரது மனைவி கண்முன்னே ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். பாலக்காடு-திருச்சூர் தேசிய நெடுஞ்சாலை அருகே கினாசேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சஞ்சித்தின் உடலில் மொத்தம் 15 காயங்கள் இருந்தன.
பாலக்காட்டில் உள்ள மாம்பரத்தில் பட்டப்பகலில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் எஸ் சஞ்சித் அவரது மனைவி கண்முன்னே வெட்டிக் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குப் பிறகு இந்தச் சம்பவத்தில் நேரடித் தொடர்புடையதாக ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) அலுவலகப் பொறுப்பாளர் என்றும், இந்தக் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டவர் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
கோட்டயம் மாவட்டம் முண்டக்காயத்தில் இருந்து அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. உத்தேச அடையாள அணிவகுப்பு மற்றும் விசாரணையின் போக்கை பாதிக்கும் என்பதால், அவரது அடையாளம் குறித்த கூடுதல் விவரங்களை வெளியிட முடியாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.விஸ்வநாத் தெரிவித்தார். இது அரசியல் கொலை என்றும், குற்றத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து தங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர் மீது பல குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றம் நடந்த உடனேயே முக்கிய குற்றவாளி மாவட்டத்தை விட்டு வெளியேறினார் என்றும், அவர் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸார் கூறினர். சஞ்சித்தை கொலை செய்துவிட்டு 5 பேரும் பெருவேம்பு, மீனாட்சிபுரம் வழியாக தமிழகத்தின் ஆனைமலைக்குத் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
அவர்களில் ஒருவர், ஒரு நண்பருடன், முண்டக்காயத்தை அடைந்தார். அங்கு அவரது மற்றொரு நண்பர் – ஒரு பேக்கரி கடை தொழிலாளி – தங்கியிருந்தார். அவர் பேக்கரி தொழிலாளியுடன் தங்கினார். போலீசார் மூவரையும் அவர்களது அறையில் இருந்து காவலில் எடுத்ததாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள நான்கு நபர்களும் ஆனைமலையில் இருந்து வெவ்வேறு இடங்களுக்குச் சென்றனர்.
கொலை செய்யப்பட்டதில் இருந்து, பேக்கரி கடை ஊழியர் உட்பட ஒன்பது பேரை விசாரணைக் குழு விசாரணைக்காக காவலில் எடுத்துள்ளது. கொல்லப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் மனைவி அர்ஷிகா இந்தக் கொலையை நேரில் பார்த்ததால், கைது செய்யப்பட்ட நபர் அவருக்கு முன்பாக அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படலாம். அதேபோல், அவ்வழியாக வாகனங்களில் சென்ற பொதுமக்களும், குற்றச் செயல்களை நேரில் பார்த்தவர்களும் சாட்சிகளாக மாறலாம். அப்போது அந்த வழியாக பள்ளி வாகனமும் சென்றது.
சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை காவல் துறையினர் கண்காணித்தனர். மாவட்ட காவல்துறை தலைவர் தலைமையில் 34 பேர் கொண்ட குழு விசாரணைக்காக அமைக்கப்பட்டது. சந்தேக நபர்கள் குற்றம் செய்ய பயன்படுத்திய காரின் சிசிடிவி காட்சிகளை குழுவினர் சேகரித்தனர். கடந்த காலங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்துள்ளனர்.
இதில் ஒரு குழு கோட்டயத்தில் முகாமிட்டு சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது. பாலக்காடு-திருச்சூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கண்ணனூரில் இருந்து ரத்தக்கறை படிந்த கத்திகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் சஞ்சித் மீது மூன்று முறை கொலை முயற்சி நடந்ததால், SDPI கட்சியினர் சஞ்சித்தை கொன்றதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும், SDPI தனது தலையீட்டை மறுத்தது. ஆர்எஸ்எஸ் தேனாரி மண்டலம் பௌதிக் சிக்ஷக்காக இருந்த சஞ்சித், தனது மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்த ஐந்து நிமிடங்களில் படுகொலை செய்யப்பட்டார்.
சுரேந்திரன், அமித் ஷாவை சந்தித்து NIA விசாரணையை கோரினார் :
பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை சந்தித்து, சஞ்சித் கொலை தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் குறைந்தது 10 பிஜேபிஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று சுரேந்திரன் ஷாவிடம் கூறினார்.
மாநிலத்தில் அடிப்படைவாதிகளால் கொல்லப்பட்ட சங்பரிவார் ஊழியர்களின் எண்ணிக்கை 50 ஆக இருக்கும் என்று அவர் கூறினார். தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திரன், “சஞ்சித் கொல்லப்பட்ட விதம், திட்டமிடல் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவை பயங்கரவாதிகளின் பங்கை சுட்டிக்காட்டுகின்றன… என்றார்.