
சமூக ஊடகங்களில் சில முக்கிய வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். இங்கு ஒருவர் செய்த மனித நேயமிக்க செயல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
லிவ் ஹார்லேண்ட் என்கிற பெண்மணி தெருக்களில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். அவர் பாடும் பல பாடல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவார்.
இப்படி தான் சில நாட்களுக்கு முன்பு எப்போதும் போல தனது இசை நிகழ்வை தெருக்களில் தொடங்கி உள்ளார்.
அப்போது இசை கலைஞர் அரோரா பாடிய ‘ரன் அவே’ என்கிற மிக பிரபலமான பாடலை ஹார்லேண்ட் பாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அருகில் இருந்த குப்பை தொட்டியில் ஒருவர் எதையோ தேடி கொண்டிருப்பதை அவர் கண்டுள்ளார்.
அங்கு எதாவது சாப்பிட கிடைக்குமா என்று அவர் தேடி கொண்டிருப்பதை ஹார்லேண்ட் உணர்ந்தார்.
உடனே தான் பாடி கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு அவர் அருகில் சென்று “நீங்கள் உங்களுக்கான உணவை வாங்கி கொள்ள நான் பணம் தருகிறேன். அதை விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
பிறகு, தான் பாடியதற்காக பிறர் செலுத்திய பணத்தில் இருந்து ஒரு பங்கை எடுத்து சென்று அவரிடம் கொடுத்து “உங்களுக்கு தேவையான புதிய உணவை நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்” என்று ஹார்லேண்ட் கூறியுள்ளார். பின்னர் மீண்டும் பாடத் தொடங்கினார்.
இதை பெற்ற அந்த ஏழை மனிதர் தனது நன்றியை ஹார்லேண்ட்க்கு தெரிவிக்கும் வகையில், “மிக்க நன்றி அன்பே” என்று மகிழ்வுடன் தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
இவை அனைத்தையும் அங்கிருந்த பலர் நேரடியாக பார்த்து கொண்டிருந்தனர். தீடிரென்று அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் இவர் அந்த ஏழை மனிதருக்கு சாப்பிட தந்த பணத்தை விட இரு மடங்கு பணத்தை அவரின் பெட்டியில் வைத்து விட்டு சென்றார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹார்லேண்ட் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த இரக்க குணத்தை பார்த்து பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்த வீடியோவை இதுவரை 1.8 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு சிலர் சிறப்பான கமெண்ட்களை தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் “நீங்கள் செய்ததை நம்ப முடியவில்லை!! நீங்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லவர்” என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், “நீங்கள் செய்த செயல் மிக அழகானது, ஐ லவ் யூ” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி பலர் ஹார்லேண்ட்டை மனதார பாராட்டி வருகின்றனர். நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்பதை இந்த வீடியோ மூலம் நாம் எல்லோரும் நினைவுக்கூற வேண்டும்.