
தமிழக முன்னாள் ஆளுநரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ரோசய்யா காலமானார். அவருக்கு வயது 88. உடல்நலக் குறைவு காரணமாக ஹைதராபாத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சனிக்கிழமை இன்று காலை அவர் காலமானார்.
ஆந்திர அரசியலில் மிகவும் பலம் வாய்ந்தவராகத் திகழ்ந்தவர். காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 1979 முதல் 2009 வரை அமைச்சராக இருந்தவர். 16 முறை ஆந்திர மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்து சாதனை படைத்தவர்.
ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து ரோசய்யா 2009ல் ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். ஆனால், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியில் வெடித்த உட்கட்சிப் பூசலால், 2010 நவம்பர் 24ல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடும் அதிருப்தியில் இருந்த ரோசய்யாவை சமாதானப் படுத்த, அவரை காங்கிரஸ் மேலிடம் தமிழகத்தின் ஆளுநராக நியமித்தது.
தமிழக ஆளுநராக ரோசய்யா 2011 முதல் 2016 வரை முழுக்காலமும் பணியாற்றினார். இடையில் 2014ல் மத்தியில் பாஜக., ஆட்சிக்கு வந்த போது, ரோசய்யா ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால், மத்திய பாஜக., அரசு அவரை மாற்றாமல், அவருக்கு மதிப்பளித்து, அவரது முழு பதவிக்காலமும் பணியாற்ற வாய்ப்பு அளித்தது.
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மௌன சுவாமி மடத்தில் சீடராக இருந்தவர். அந்த மடத்தின் கிளை மடமாக தமிழகத்தில் குற்றாலத்தில் உள்ள மௌன சுவாமி மடம் சித்தேஸ்வரி பீடத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் ரோசய்யா.
ஆளுநர் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற பின் ரோசய்யா தீவிர அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அண்மைக் காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டிச.4 இன்று காலை காலமானார்.
அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.