பாஜக., செயற்குழு: மாற்றியமைத்தார் அமித் ஷா

இந்தியா

புது தில்லி: பாஜக தேசிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் அமித் ஷா மாற்றியமைத்தார். புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விவரங்களை தில்லியில் அவர் அறிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ்,வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி, வருண் காந்தி உள்ளிட்ட 111 பேர் செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் இடம்பெற்றுள்ளனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி, வி.சண்முகநாதன் ஆகியோர் தேசிய செயற்குழுவில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பலரும் செயற்குழுவில் இடம் பெற்றுள்ளனர். எனினும், மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, நஜ்மா ஹெப்துல்லா, நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகையுமான ஹேமமாலினி ஆகியோர் புதிய தேசிய செயற்குழுவில் இடம்பெறவில்லை. பாஜக ஆளும் 8 மாநிலங்களின் முதல்வர்கள், 2 துணை முதல்வர்கள் உள்ளிட்ட 27 பேர் நிரந்தர அழைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள 40 மூத்த தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், எம்.பி. சாத்வி நிரஞ்சன் ஜோதி, மத்திய இணை அமைச்சரும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல திரைப்படப் பாடகருமான பாபுல் சுப்ரியோ, திரைப்பட நடிகையும் எம்.பி.யுமான கிரண் கெர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கட்சியின் புதிய தேசிய செயற்குழு, அடுத்த மாதம் முதல் வாரத்தில் பெங்களூரில் கூடுகிறது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.