இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவிற்கு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலிருந்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி கொண்ட அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பி.சி.சி.ஐ. தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.



