புது தில்லி:
நாட்டுக்காகப் பணி செய்யும் பெரிய மனசு காங்கிரஸுக்கு இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, சுய தொழில் புரிய இளைஞர்களுக்கு இந்த அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ள வாய்ப்புகள் குறித்து விவரித்தார்.
குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்துப் பேசினார் பிரதமர் மோடி. அவரது இன்றைய உரை குறித்து பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியது. இன்றைய அரசியல் சூழலில், பட்ஜெட் குறித்த விவாதங்கள் ஊடகங்களில் பரவலாக தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடியின் உரை பெரிதும் எதிர்பார்க்கப் பட்டது. அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதத்தில் மோடி பேசினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மோடி பேசியபோது, முன்னதாக ரயில்வே குறித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதால், பிடார் – கல்புர்கி ரயில்வே திட்டம் குறித்த உண்மையை தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 2004ஆம் வருடம் இந்த திட்டத்துக்கு வாஜ்பாய் ஆட்சியில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் 2013 வரை எந்தப் பணியும் நடைபெறவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட உள்கட்டமைப்பில் இந்த அரசு வேகமாக செயல்படுகிறது. நாங்கள் செய்த பணிக்கு காங்கிரஸ் பெயர் எடுக்க முயற்சி செய்கிறது. குறுகிய காலத்தில் நாங்கள் நீண்ட தொலைவுக்கு பைபர் வயர்கள் பதித்துள்ளோம். காங்கிரஸ் ஆட்சியை விட நீண்ட தூரம் சாலை அமைத்துள்ளோம். காங்கிரஸ் விட்டுச் சென்ற பணிகளை நிறைவு செய்துள்ளோம். 3 ஆண்டுகளில் இந்த அரசின் பணியை நீங்கள் புறக்கணிக்க முடியாது. வேகமான ரயில், நீண்ட சுரங்கப்பாதை தேசிய ஜனநாயக கூட்டணி அரசில்தான் அமைக்கப்பட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, நாட்டின் வேலை திட்ட கலாசாரத்தையே மாற்றியுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் அரசு பணிகள் முடிக்கப்படுகின்றன. கடந்த அரசுகளை விட அதிக வேகத்தில் சாலை அமைக்கப்படுகிறது. புதிய கட்டுமான திட்டங்கள் வேகமாக நடக்கின்றன. நீங்கள் 59 கிராமங்களுக்கு பைபர் ஆப்டிக்கல் நெட்வொர்க்கை கொடுக்க முடிந்தது. ஆனால், 3 வருடங்களில், 1 லட்சம் கிராமங்களில் இந்த சாதனையை நாங்கள் நிகழ்த்திவிட்டோம்.
கடந்த சில வருடங்களுக்கு முன் உங்களுக்கு மக்கள் கசப்பு மருந்தைக் கொடுத்தனர். ஆனால் சிலர் இன்னும் அந்த உண்மையை உணரவில்லை. தேர்தலுக்காக ராஜஸ்தான் மக்களை தவறாக வழி நடத்தினீர்கள். ஆனால் கடந்த 3 வருடங்களாக மத்திய அரசும், ராஜஸ்தான் அரசும்தான் இந்தப் பிரச்னையை தீர்த்து வைத்தது.
சுதந்திர தினத்தின் போதும், ஏன் பல தடவைகளிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கும், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதற்கும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கும்தான் நன்றி தெரிவித்து கொண்டுள்ளோம். தேவைப்படும் இடத்தில் நான் அவரவர்க்குரிய பெருமையை அளித்துள்ளேன். ஆனால், காங்கிரஸ் பிரதமர் எவராவது ஒருவர் இப்படி கூறியதுண்டா? மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஒருவரையாவது பாராட்டினார்களா? அவர்கள் குடும்பத்தை தவிர வேறு யாரையும் பாராட்டவில்லை. உங்கள் கோஷங்களும் கூச்சலும் என்னை தடுக்காது. இதனால், உங்கள் நேரத்தை வீணடிப்பதை நீங்கள் தொடர்ந்து கொள்ளலாம்.
ஆனால் வேலைவாய்ப்பு மற்றும் வேலை குறித்து பொய்யான தகவல்களைத் தந்து மக்களை தவறாக வழி நடத்த வேண்டாம். பிரதமர் முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 10 கோடி ரூபாய் கடன் அளிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ரூபாய் கூட கொள்ளை அடிக்கப்படவில்லை. ஒரு புகார் கூட விரவில்லை. 10 கோடி ரூபாய் கடன் என்பது சாதாரண தொகை இல்லை இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இளைஞர்களின் உற்சாகம் மற்றும் எழுச்சியை நான் பார்க்கிறேன். அவர்கள் சுயமாக எதையாவது செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். சொந்தமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்க முயற்சி செய்கிறார்கள். அவர்களின் கனவுகளுக்கு மத்திய அரசு வடிவம் தருகிறது. ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா யோஜனா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா ஆகியவற்றின் பாதிப்புகள் காங்கிரஸ் சொல்லும் பொய்யை தகர்த்தெறிந்துள்ளன.
நீங்கள் என்ன வேண்டுமானாலும், உங்கள் நோக்கம் போல் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், மக்கள் மாற்றத்தை உணர்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் எதையும் செய்யவில்லை. அங்கு நீங்கள் சென்று பார்த்தால், அங்கே மேற்கொள்ளப் பட்டிருக்கும் பணிகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்துள்ளது. ஆனால், நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டு அதே பல்லவியைப் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் பெரிய மனசுடன் வேலைபார்க்கவில்லை. சுயநலத்திற்காக, அரசியல் லாபத்திற்காகத்தான் எதையுமே செய்வீர்கள். நாட்டிற்காக பணி செய்ய பெரிய மனது வேண்டும். அது உங்களிடம் இல்லை என்று பேசினார் மோடி.
பிரதமர் மோடி மக்களவையில் பேசிய போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவரைப் பேச விடாமல் கூச்சல் எழுப்பிக் கொண்டே இருந்தனர். அவர்கள் செய்த இடையூறுகள், தொலைக்காட்சியின் வழியே நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தின.