கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து: 5 பேர் பலி; நிதின் கட்கரி இரங்கல்!

வெடிவிபத்தில் சிக்கிய சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று திடீரென அதில் வெடிவிபத்து ஏற்பட்டது.

கொச்சி:

கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் ஓஎன்ஜிசிக்கு சொந்தமான சாகர் பூஷண் கப்பலில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப் பட்டனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

வெடிவிபத்தில் சிக்கிய சாகர் பூஷண் கப்பல், பழுது பார்ப்பதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று திடீரென அதில் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து தொடர்பாக விசாரணை நடத்த மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், கொச்சி துறைமுகத்தில் நடந்த விபத்து குறித்து மிகவும் வருத்தப்படுவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.