ஏழு வருடமாக ஏய்த்துக் கட்டிய நீரவ்: காங்கிரஸ் ஆட்சியின் மற்றுமோர் அவலம்!

இந்தியா சற்றுமுன் வணிகம்

புது தில்லி:

இந்தியாவை உலுக்கியெடுக்கும் மிகப் பெரும் கடன் ஏய்ப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று விட்டார். அவர் தப்பியோடிய பிறகே அவர் கண்காணிக்கப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது புயலைக் கிளப்பியுள்ளது.

வியாழக்கிழமை நேற்று நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரூ.5,100 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (வயது 46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்தவர். இவர் நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். இவர் குறித்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்த ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை, இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இவர் பெயரையும் பட்டியல் இட்டிருந்தது.

நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி புதன்கிழமை ஒரு புகார் கொடுத்தது. அதில், நீரவ் மோடி சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்திருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்தே இந்த மோசடி நடைபெற்று வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, ரூ.280 கோடி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து, நீரவ் மோடிக்குச் சொந்தமான இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தினர்.

ALSO READ:  செங்கோட்டை சார்லப்பள்ளி இடையே சிறப்பு ரயில்!

மும்பை குர்லா பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் இல்லம், காலா கோடா பகுதியில் உள்ள அவரது நகைக் கடை, பாந்த்ரா, லோயர் பரேல் பகுதிகளில் உள்ள அவருக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள், குஜராத் மாநிலம் சூரத் நகரில் 3 இடங்கள், தில்லி டிஃபன்ஸ் காலனி மற்றும் சாணக்யபுரி ஆகிய இடங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான கடைகளில் சோதனை நடைபெற்றது. இதில், தங்கம், வைரக் கற்கள், ரொக்கப் பணம் என, ரூ.5,100 கோடி மதிப்பிலான உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து நீரவ் மோடிக்குச் சொந்தமான 6 சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி சீல் வைத்தது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது வரைமுறையின்றி தொழிலதிபர்களுக்கு வங்கிப் பணம் அள்ளிக் கொடுக்கப் பட்டது. எஸ்பிஐ வங்கியில் பெறப்பட்ட பணத்துடன் ஏய்ப்பு செய்து தொழிலதிபர் விஜய் மல்லையா நடவடிக்கை எடுக்கும் முன்னர் தப்பிச் சென்று விட்டார்.. இப்போது அவரது பாணியில், அவரை விட அதிகம் ஏய்த்த நீரவ் மோடி, நடவடிக்கை எடுக்கப் படும் முன்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.