அஸ்ஸாமை தொடர்ந்து குஜராத்திலும் மழை கொட்டியது.அதிகனமழை காரணமாக 14 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மழையால் ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவின் குஜராத் பயணம் தள்ளிப்போடப்பட்டுள்ளது.


குஜராத்தில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகனமழையில் 14 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை சுமார் 31 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். சுமார் ஒருமாத காலமாக விட்டு விட்டு பெய்துவரும் தொடர் கனமழையால் குஜராத் மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு குஜராத் மற்றும் கட்ச்-சவுராஷ்டிரா பிராந்தியங்களில் 24 மணி நேரத்தில் பெய்த அதிகனமழையால் 14 பேர் பலியாகியுள்ளனர்.
வல்சாத், நவ்சாரி, தாபி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவுரங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனிடையே, சோட்டா உதய்பூரில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. தொடர்ந்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் முதல் ஏராளமான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 31 ஆயிரத்து 35 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் 18 அணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும் இரு அணிகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன என மாநில பேரிடர் மேலாண்மை மந்திரி ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த மாவட்டங்களில் உடனடியாக ஆய்வை மேற்கொண்டு மக்களுக்கு தாமதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழையால் பல அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மாநிலத்திலேயே பெரிய அணையான சர்தார் சரோவர், 48 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக, ஜனாதிபதி தேர்தலுக்கான பா.ஜ.க. வேட்பாளர் திரவுபதி முர்முவின் குஜராத் பயணம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. அவர் நேற்று அங்கு சென்று ஆதரவு திரட்டுவதாக இருந்தார்.