சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில், இன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து கோர்பா காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் சிங் கூறியதாவது:
சத்தீஸ்கரின் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து சுர்குஜா மாவட்டத்துக்கு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில் பாங்கோ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மடாய் காட் அருகே அதிவேகமாக வந்துகொண்டிருந்து பேருந்து நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில், பேருந்தின் ஒரு பகுதி முழுவதும் நொறுங்கியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, பேருந்து ஓட்டுநர் எதிரே வந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக முயன்போது நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.