புது தில்லி: குஜராத்தை ஒட்டிய, இந்திய கடல்பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்று கடலோர காவல்படை அதிகாரி தெரிவித்த கருத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது. 2014ம் வருடம் டிசம்பர் 31-ந்தேதி குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து 365 கி.மீ., தொலைவில் இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் வந்த கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இந்தச் சம்பவத்தில் அந்தப் படகில் இருந்த பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். இந்தப் படகில் ஊடுருவியவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால், கடலோர காவல்படையினர் படகை துரத்திச் சென்று சுற்றி வளைத்து அதில் இருந்தவர்களை சரண் அடையும்படி கூறினர். அவர்கள் யாரும் சரண் அடையவில்லை என்றும், இந்தியக் கடலோரக் காவல் படையிடம் பிடிபடாமல் இருக்க படகில் இருந்தவர்கள் தாங்களாகவே படகை குண்டு வைத்து தகர்த்து தற்கொலை செய்து கொண்டனர் என்றும் படகில் இருந்த அனைவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்றும் தகவல் வெளியானது. இதனை பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் உறுதி செய்தார். இந்நிலையில், வடமேற்கு கடலோர காவல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த பி.கே. லோசாலி ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மர்ம படகில் இருந்தவர்கள் படகை தாங்களாக தகர்த்துக் கொள்ளவில்லை.. உங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் 31-ந்தேதி இரவு நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் இருக்கும். இந்த சம்பவத்தின்போது நான் காந்திநகரில் இருந்தேன். அன்று இரவு பாகிஸ்தான் படகை தகர்க்கும்படி நான் கூறினேன். அவர்களுக்கு நாங்கள் பிரியாணி வழங்க விரும்பவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடலோர காவல்படை எப்படி உறுதி செய்தது? என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, பாகிஸ்தான் படகைத் தகர்த்ததை பெரிய பாவமாக பாரிக்கர் கருதுகிறாரா? அல்லது இந்த தேசத்திடம் பொய் கூறியதை பெரிய பாவமாகக் கருதுகிறாரா? என்று கேள்வி எழுப்பினார். இதனிடையே, லோசாலியின் பேட்டி விவரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையின் துணை பொது இயக்குனர் கே.ஆர். நவ்தியால் தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தாம் தெரிவித்த கருத்து குறித்தும், பத்திரிகையில் வெளியான தகவலை மறுத்தும் லோசாலி தனக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, தான் பேசியது, தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது என்று பி.கே.லோசாலி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது, “அன்று என்ன நடந்தது என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. எந்த தேசவிரோத சக்தியும் நமது கடல் எல்லைக்குள் நுழைந்துவிடக்கூடாது என்றும் நாம் அவர்களுக்கு பிரியாணி வழங்கப் போவதில்லை எனவும்தான் அந்தப் பேட்டியில் கூறினேன். படகின் மீதான நடவடிக்கை இயல்பாகவே வகைப்படுத்தப்பட்ட ஒன்று. அதன் விவரங்கள் (என்னுடன்) பகிர்ந்து கொள்ளப்படவில்லை” என்றார்.
பாகிஸ்தான் படகைத் தகர்த்தோம் என்ற இந்திய கடலோர காவற் படை அதிகாரி கருத்தால் சர்ச்சை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari