புது தில்லி: தனியார் நிறுவனங்களுக்கு பெட்ரோலியத் துறையின் முக்கிய ஆவணங்களைக் கசிய விட்டதாக அந்தத் துறையின் அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேரை தில்லி போலீஸார் கைது செய்துள்ளனர். மத்திய பட்ஜெட் மாதக் கடைசி நாளான பிப்.28ல் தாக்கலாகவுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் பட்ஜெட் தயாரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறையின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து அறிந்து கொள்வதற்காக தனியார் நிறுவனங்கள், பெட்ரோலியத் துறையிலுள்ள சில அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுத்து முக்கிய ஆவணங்களைப் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெட்ரோலியத் துறையில் பணியாற்றும் எழுத்தர், உதவி அலுவலர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைது சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தில்லி மாநகர காவல் ஆணையர் பாஸி, ஆவணங்கள் பிரதி எடுக்கப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கும் தனியார் ஆலோசகர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்படுவார்கள்” என்று தெரிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக டில்லியில் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தச் சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆட்சியில், இது போன்று ஆவணங்கள் கசிவது சர்வ சாதாரணமாக நடந்து வந்தது. ஆனால் தற்போது கடுமையான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்விஷயத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றார். கைது செய்யப்பட்டவர்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸைச் சேர்ந்த நபர் ஒருவரும் அடங்குவார்!
பெட்ரோலியத் துறை ஆவணங்களை கசிய விட்டதாக துறை அலுவலர்கள் இருவர் உள்பட 5 பேர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari