பேஸ்புக்கில் லைக் வாங்கும் ஆசை: ஆமை மீது நின்று படம் எடுத்தவருக்கு கிடைத்தது சிறை

இந்தியா

hyderabad-youth-on-tortoise ஐதராபாத்: ஃபேஸ்புக்கில் லைக்குகளை வாங்கும் ஆசையால் ஆமை முதுகில் ஏறி நின்று படம் எடுத்துக் கொண்டவருக்கு சிறைத் தண்டனையே பரிசாகக் கிடைத்தது. ஐதராபாத்தில் உள்ள நேரு உயிரியல் பூங்காவுக்கு கடந்த மே மாதம் முகமது அப்துல் என்ற பசல் ஷேக் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளார். அங்குள்ள ராட்சத ஆமையைப் பார்த்தவர், அதன்மீது ஏறி நின்று படம் எடுத்து ‘ஃபேஸ்புக்’கில் வெளியிட்டால் நிறைய ‘லைக்ஸ்’ கிடைக்கும் என ஆசைப்பட்டார். உடனே பாதுகாப்பு வேலியைத் தாண்டினார். ஆமை முதுகில் ஏறி நின்றார். அப்படியே படம் எடுத்துக் கொண்டார். பின்னர் அதனை அவர் ஆசைப்பட்ட படியே ‘ஃபேஸ்புக்’கில் வெளியிட்டார். இந்தப் படம் உள்ளூர் தினசரியிலும் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக்கை கண்டுகொள்ளாமல் விட்டிருந்த உயிரியல் பூங்கா அதிகாரிகள், நாளிதழில் வெளியான படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து பத்திரிகைச் செய்தியையும், ‘பேஸ்புக்’கில் அவரது பக்கத்தில் புகைப்படத்தையும் பார்த்து உறுதி செய்த போலீசார், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழும் வழக்குப் பதிவு செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.