புது தில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தூர்தர்ஷன் தொடர்ந்து வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. எனவே, தூர்தர்ஷன் மூலம் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் வழியே ரசிகர்கள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை தடையின்றிப் பார்க்க வழி ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ, இஎஸ்பிஎன், ஸ்டார் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு வழக்கினைத் தொடர்ந்திருந்தன. அதில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை நாங்கள் பிரசார் பாரதிக்கு வழங்க வேண்டியுள்ளது. ஆனால், அக்காட்சிகளை தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி அளித்தால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு அவற்றை வழங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று அதில் கோரியிருந்தன. இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், உலகக் கோப்பை கிரிக்கெட் ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி வழங்கக் கூடாது என்று கடந்த 4ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பிரசார் பாரதி மேல் முறையீடு செய்தது. ] இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், பிரஃபுல்லா சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நீதிபதிகள் வெள்ளிக்கிழமை நேற்று பிறப்பித்த உத்தரவில், “உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளை தனியார் கேபிள் ஆபரேட்டர்களுக்கு பிரசார் பாரதி தொடர்ந்து வழங்கலாம். மறு உத்தரவு வரும் வரை தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை மாதம் நடைபெறும்” என்று கூறப்பட்டது. அதாவது, நீதிமன்றம் குறிப்பிட்ட படி, இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும்போது உலகக் கோப்பை போட்டிகள் அனைத்தும் முடிந்து விடும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், தூர்தர்ஷனில் உலகக் கோப்பை போட்டிகளை ரசிகர்கள் தடையின்றிப் பார்த்து ரசிக்கலாம்.
உலகக் கோப்பை கிரிக்கெட்: தொடர்ந்து ஒளிபரப்ப தூர்தர்ஷனுக்கு அனுமதி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari