புதிய தேர்தல் ஆணையராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் நேற்று முன்தினம் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில் மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.