
மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மீது எனக்கு தனிப்பட்ட பாசமும், அன்பும், அக்கரையும் எப்போதும் உண்டு என டில்லியில் இன்று நடந்த பழங்குடியினர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் இன்று ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசியதாவது
இந்தியாவில் இன்று பாரம்பரிய பொருட்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பழங்குடியின சமூகத்தினரால் தயாரிக்கப்படும் பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பழங்குடியின பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. அதேபோல் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
முந்தை அரசின் ஆட்சிக் காலத்தில், மூங்கில் வெட்டுவது சட்டப்பூர்வமாக தடை செய்யப்பட்டது. பாஜக ஆட்சியில் மூங்கிலை புல் வகைக்குள் கொண்டு வந்து அதன் மீதான தடைகளை எல்லா நீக்கி விட்டோம்.இதன் மூலம் மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களின் உற்பத்தி அதிகரித்து பெரிய தொழிலாக மாறி வருகிறது.
21ம் நூற்றாண்டின் இந்தியா ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ என்ற கொள்கையின் படி அரசு சிறப்பாக செயல்படுகிறது. அனைவருக்கு வளர்ச்சி என்பதே எங்களின் இலக்கு. கடந்த 8-9 ஆண்டுகளாக, ஆதி மஹோத்ஸவ் போன்ற பழங்குடியினர் சார்ந்த நிகழ்வுகள் நாட்டில் நடைபெறுகிறது. இது போன்ற பல திட்டங்களில் நானும் ஒரு அங்கமாகிவிட்டேன்.
பழங்குடியினரின் நலன் என்பது எனது தனிப்பட்ட உறவுகள் மற்றும் உணர்வுகள் சார்ந்த விஷயம் ஆகும். மலைவாழ் மற்றும் பழங்குடியினர் மக்கள் மீது தனிப்பட்ட பாசமும், அன்பும், அக்கரையும் எப்போதும் எனக்கு உண்டு. இவ்வாறு அவர் பேசினார்.




