
ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பயங்கரவாதிகள் பண்டிட் சமூகத்தை சேர்ந்த நபரை சுட்டுக்கொன்ற நிலையில் ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.காஷ்மீரில் சிறுபான்மையினர்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதாக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரான பண்டிட் சமுகத்தினரை குறிவைத்து தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. பயங்கரவாத தாக்குதலை தடுக்க பாதுகாப்பு படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பண்டிட் சமுகத்தை சேர்ந்தவரை பயங்கரவாதிகள் இன்று சுட்டுக்கொன்றனர். அச்சென் பகுதியை சேர்ந்த சஞ்சய் சர்மா (வயது 40) என்ற நபர் இன்று காலை 11 மணியளவில் அங்குள்ள சந்தை பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை இடைமறித்த பயங்கரவாதிகள் சஞ்சய் சர்மாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சஞ்சய் சர்மாவை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சய் சர்மாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். பயங்கரவாத தாக்குதல் குறித்து தகவலறிந்து பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். காஷ்மீரில் பண்டிட்களை குறிவைத்து மீண்டும் பயங்கரவாத தாக்குதல் அரங்கேறியுள்ளதால் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து காஷ்மீர் டிஐஜி கூறுகையில், இந்த சம்பவம் காலை 10.30 மணியளவில் நடந்தது. தனது மனைவியுடன் சந்தைக்கு சென்றுகொண்டிருந்தவரை தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டுள்ளார். தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளோம். விரைவில் தீவிரவாதிகளை முடக்குவோம் என்றார்.
இது சம்பவம் குறித்து மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கூறியதாவது:
அது ஹரியாணாவாக இருந்தாலும் சரி, காஷ்மீராக இருந்தாலும் சரி இதுமாதிரி சம்பவம் எங்கு நடந்தாலும் பாஜகவுக்கு மட்டும்தான் உதவியாக இருக்கும். காஷ்மீரில் சிறுபான்மையினர்களைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்புநிலையைக் காட்டுவதற்காக மட்டுமே சிறுபான்மையினரைப் பயன்படுத்துகின்றனர்.