ஐ.பி.எல் 2023 – பத்தாம்நாள் – 09.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐ.பி.எல் 2023 தொடரின் பத்தாம் நாளான நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத், கொல்கொத்தா அணிகளுக்கு இடையே நடந்தது. இரண்டாவது ஆட்டம் ஹைதராபாத்தில் பஞ்சாப் அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடந்தது.
குஜராத் vs கொல்கொத்தா
கடைசி ஓவரில் 5 சிக்சர் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார் கொல்கொத்தா அணியின் ரிங்கு சிங். குஜராத் அணியை (204/4, விஜய் ஷங்கர் 63, சாய் சுதர்ஷன் 53, சுப்மன் கில் 39, சுனில் நரேன் 3/33) கொல்கொத்தா அணி 207/7, வெங்கடேஷ் ஐயர் 83, நிதீஷ் ராணா 45, ரிங்கூ சிங் 48, ரஷீத் கான் 3/37) மூன்று விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் ஆடிய குஜராத் அணி விஜய்சங்கர், சாய் சுதர்சன் அதிரடியால் 20 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 207 ரன்கள் எடுத்து, கடைசிப் பந்தில் திரில் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை குவித்தது. சாய் சுதர்சன் அரை சதமடித்து 53 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய விஜய் சங்கர் 21 பந்தில் அரை சதமடித்தார். அவர் 63 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஷுப்மன் கில் 39 ரன்னில் அவுட்டானார்.
அதன் பின்னர் ஆடவந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் வெங்கடேஷ் ஐயர் ராணாவுடன் இணைந்து அணியின் ஸ்கொரை 128 வரை கொண்டு வந்தார். 16ஆவது ஓவர் இறுதியில் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்க, வெற்றிக்கு 24 பந்துகளில் 50 ரன் தேவைப்பட்டது. அப்போது ரஷீத் கான் பந்துவீச வந்தார். இன்று அவர்தான் குஜராத் அணியின் அணித்தலைவர். காய்ச்சல் காரணமாக ஹார்திக் பாண்ட்யா ஆடவில்லை.
ரஷீத் கான் 17ஆவது ஓவரில் ரசல், சுனில் நரேன், ஷர்துல் தாகூர் ஆகியோரின் விக்கட்டுகளை ஹாட்ரிக்காக எடுத்தார். அடுத்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. என்வே மீதமுள்ள 2 ஓவர்களில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டன.
19ஆவது ஓவரில் ரிங்கூ சிங் அடித்த ஒரு சிக்சர் மற்றும் ஒரு ஃபோரால் 14 ரன்கள் எடுக்கப்பட்டது. கடைசி ஆறு பந்துகளில் 29 ரன்கள் தேவை. முதல் பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்தார். அதன் பின்னர் நடந்தது கிரிக்கட்டில் நம்பமுடியாத ஒரு சம்பவம். ரிங்கூ சிங் வரிசையா அடுத்த ஐந்து பந்துகளையும் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்ட நாயகனாக ரிங்கூ சிங் அறிவிக்கப்பட்டார்.
பஞ்சாப் vs ஹைதராபாத்
பஞ்சாப் அணியை (143/9, ஷிகர் தவான் 99, சாம் கரன் 22,மயங்க் மார்கண்டே 4/15) ஹைதராபாத் அணி 17.1 ஓவரில் 145/2, ராகுல் திரிபாதி 74, எய்டன் மர்கரம் 37) வெற்றிகண்டது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவர் 66 பந்தில் 5 சிக்சர், 12 பவுண்டரி உள்பட 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சாம் கர்ரன் 22 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை; இரட்டை இலக்கத்தைக்கூட அடையவில்லை.
மூன்று வீரர்கள் பூஜ்யம் ரன்; இருவர் 1 ரன். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. இறுதியில், பஞ்சாப் அணி 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஐதராபாத் விளையாடியது. தொடக்க வீரர்கள் ஹாரி ப்ரூக் (13 ரன்) மற்றும் மாயங்க் அகர்வால் (21 ரன்) சுமாரான தொடக்கம் கொடுத்தனர்.
அதன்பின்னர் ராகுல் திரிபாதி 48 பந்துகளில் 74 ரன் மற்றும் ம்ர்க்ரம் 21 பந்துகளில் 37 ரன் கள் அடித்து 17.1 ஓவரிலேயெ அணியை வென்ற்றிக்கு இட்டுச் சென்றனர். ஆட்டநாயகனாக ஷிகர் தவான் அறிவிக்கப்பட்டார்.