ஐ.பி.எல் 2023 – 13ஆம் நாள் – 12.04.2023
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஐ.பி.எல் 2023 தொடரின் 13ஆம் நாளான நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்றது. ராஜஸ்தான் அணி (175/8, பட்லர் 52, படிக்கல் 38, அஷ்வின் 30, ஹெட்மேயர் 30, ஆகாஷ் சிங், தேஷ்பாண்டே, ஜதேஜா தலா 2 விக்கட்) சென்னை அணியை (172/6, கான்வே 50, ரஹானே 31, ஜதேஜா 25, தோனி 32, அஷ்வின் 2/25, சாஹல் 2/27) 3 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மகேந்திரசிங் தோனி அணித்தலைவராக விளையாடும் 200ஆவது ஐ.பி.எல் ஆட்டம் இது. டாஸ் வென்ற அவர் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (10 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பட்லரும் (36 பந்துகளில் 52 ரன்) படிக்கலும் (26 பந்துகளில் 38 ரன்) இனைந்து நன்றாக ஆடி அணியின் ஸ்கோரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.
சஞ்சு சாம்சன் இன்று ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அஷ்வின் பட்லரோடு இணைந்து அடுத்த 7 ஓவர்கள் விளையாடி 30 ரன்கள் அடித்தார். அவரும் பட்லரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க ஹெட்மேயர் 18 பந்துகளில் 30 ரன் அடித்து ராஜஸ்தான் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.
176 ரன் என்ற எளிய இலக்கை அடைய ஆடத்தொடங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் (10 பந்துகளில் 8 ரன்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். ரஹானே (19 பந்துகளில் 31 ரன்) கான்வேயுடன் (38 பந்துகளில் 50 ரன்) இணைந்து நன்றாக விளையாடினார்.
ராஜஸ்தானின் சுழல் பந்து ஜாம்பவான்களாகிய அஷ்வின், சாஹல் ஆகிய இருவரின் பந்து வீச்சில் ரஹானே, ஷிவம் டுபே (அஷ்வின்), கான்வே, அம்பாதி ராயடு (சாஹல்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
கடைசி இரண்டு ஓவர்களில் 40 ரன் எடுக்க வேண்டிய நிலை; தோனி, ஜதேஜா இருவரும் ஆடிக்கொண்டிருந்தனர். கடைசி ஓவரில் 2 சிக்ஸ் அடித்து திடீர் பரபரப்பை தோனி ஏற்படுத்திய போதிலும் இலக்கை எட்ட முடியாததால் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அஷ்வின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.