
224 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக., காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கர்நாடக சட்டமன்றத்துக்கான தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணியுடன் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு நிறைவடையும் நேரமான மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள், வரிசையில் நின்று வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். முன்னதாக மாலை 5 மணி நிலவரப்படி 65.59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்தில் மொத்தம் 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 67 லட்சத்து 28 ஆயிரத்து 53 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 64 லட்சத்து 74 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 4 ஆயிரத்து 927 பேரும் உள்ளனர்.
இவர்கள் வாக்களிக்க வசதியாக 58,282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 11,617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சில வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாக்குப் பதிவு நிறைவுற்ற நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்பது குறித்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதில் பாஜக., முந்தியுள்ளது. சில கருத்துக் கணிப்புகள், தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்று தெரிவித்துள்ளன. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி, அடுத்த ஆட்சியில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அவை தெரிவிக்கின்றன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்
மொத்த தொகுதிகள்: 224
டி.வி.-9
பா.ஜ., 88-98
காங்., 99-109
ம.ஜ.,த., 21-26
ரிபப்ளிக் டி.வி
பா.ஜ., 85-100
காங்., 94-108
ம.ஜ.,த., 24-32
பிற கட்சிகள்: 2-6
டைம்ஸ் நவ்
பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை -03
ஜி.நியூஸ் மேட்ரிஸ்:
பா.ஜ., 79-94
காங்., 103-118
ம.ஜ.த., 25-33
மற்றவை: 2-5
நியூஸ் நேசன்
பா.ஜ., 114
காங்., 86
ம.ஜ.த., 21
மற்றவை:0
சவர்ணா நியூஸ் / ஜன் கி பாத்:
பா.ஜ., 94-117
காங்., 91-106
ம.ஜ.,த., 14-24
மற்றவை: 0