
பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தல், அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 65.07 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் பதவி காலம் வரும் 24ம் தேதி நிறைவு பெறுகிறது. புதிய சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு துவங்கியது. மாலை 6:00 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்தது.
பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., உட்பட பல்வேறு கட்சியினர், சுயேச்சை என 2,615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 58 ஆயிரத்து 545 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றனர்.
முதல்வர் பசவராஜ் பொம்பை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 65.07 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியுள்ளன.
வரும் 13ம் தேதி சனிக்கிழமை காலை 8:00 மணி முதல் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்று மதியமே, அடுத்து ஆட்சி அமைப்பது யார் என்ற கேள்விக்கு விடை கிடைத்து விடும்.
கர்நாடகா மாநிலம் விஜயநகர் மாவட்டம் மசபின்னலா கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை உடைத்த 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.





