கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வரை புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 224 தொகுதிகளிலும் சராசரியாக 72.67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 224 தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். காங்கிரஸ் – 223, பாஜக – 224, மஜத – 209 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தன. இது தவிர, சிபிஐ, சிபிஎம், பகுஜன்சமாஜ்கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஐஜத போன்ற பல கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டுள்ளன. ஆனாலும், பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி.
இந்த நிலையில் தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும், ஒரு வேளை தொங்கு சட்டப் பேரவை அமையும்பட்சத்தில் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திரைமறைவு அரசியல் வேலைகளில் பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கா்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் மாநிலம் முழுவதும் 34 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. பெங்களூரில் 4 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 135 இடங்களிலும், பாஜக 63 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து பல சுற்று முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் முன்னிலை எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டும், பாஜகவின் முன்னிலை எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துகொண்டும் வருகிறது.
கர்நாடகத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வரை புதிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யவார்கள். அதன் அடிப்படையில் கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பணம் மற்றும் அதிகார பலத்தை வைத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக முயன்றது. அது தோல்வியில் முடிந்துள்ளது. காங்கிரஸ் வெற்றிக்கு உழைத்த காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்களுக்கு நன்றி.
கர்நாடக தேர்தல் வெற்றியை மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாஜக அல்லாத கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், புதிதாக பொறுப்பேற்க உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்த முதல்வரை தேர்வு செய்வார்கள். அதன் அடிப்படையில் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று சித்தராமையா கூறினார்.