
கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை ஜடேஜா ஒரு சிக்ஸ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.
ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி திங்கள் கிழமை நேற்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த போட்டி மழை காரணமாக மறுநாள் ஒத்திவைக்கப் பட்டது. இதை அடுத்து திங்கள் கிழமை நேற்று இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் சென்னை அணி, டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து முதலில் பேட் செய்தது குஜராத் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி முதல் 7 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தனர். சுப்மான் கில் 20 பந்துகளில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து ஆட வந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஸன், விருத்திமான் சாஹாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இரண்டாவது விக்கெட் 14 வது ஓவரில் விழுந்த போது, அணியின் ஸ்கோர் 131 ஆக இருந்தது. சாஹா 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்ஸன் 47 பந்துகளில் 6 சிக்ஸ் 8 ஃபோர்களுடன் 96 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் என்ற ஸ்கோர் எடுத்து, சிறந்த இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.
இதன் பின் மழை குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. மிகப்பெரும் ஸ்கோரை விரட்டிய சென்னை அணியில் எந்த பேட்ஸ்மெனும் அரை சதம் எட்டவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் ரன் ரேட் குறையாமல் ஆறும் நான்குமாக அடித்து குறைந்த பந்துகளில் அவரவர் பங்கை செய்தனர்.
கெய்க்வாட் 26 ரன், கான்வே 47,ஷிவம் துபே 32, அஜிங்யா ரஹானே 27, ராயுடு 19 என ரன்கள் எடுத்தனர். கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் 6 பந்துகளில் 15 ரன் எடுத்து வெற்றி நாயகனாக ஜொலித்தார் ஜடேஜா. அதுவும் கடைசி இரு பந்தில் ஒரு சிக்ஸும் ஃபோரும் அடித்து 10 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்த ரவிந்திர ஜடேஜா அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.
இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.