
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இரண்டு வானிலை நிகழ்வுகளின் தொடர்பு காரணமாக ஒரு அரிய நிகழ்வு, 2013ல் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட ‘இமயமலை சுனாமி’ போன்ற காட்சிகளுடன், வட இந்தியாவின் பல பகுதிகளில் இடைவிடாத கனமழைக்கு வழிவகுத்திருக்கிறது.
தற்போது நாம் காண்கின்ற செயற்கைக்கோள் படங்கள், கேதார்நாத்தில் திடீர் வெள்ளத்தைத் தூண்டிய 2013 ‘இமயமலை சுனாமி’யின் போது காணப்பட்ட சூழ்நிலைக்கு ஒப்பான படங்களாக உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான பேர் இறந்துள்ளனர். மேலும் அப்பகுதியில் பெரும் சொத்து இழப்பு ஏற்பட்டது.
சமீபத்திய நிகழ்வாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை 24 மணி நேரத்தில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது 1982ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக பதிவாகியுள்ள மழை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் ஏற்கனவே கனமழை எச்சரிக்கை மற்றும் திடீர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரிய வானிலை நிகழ்வு
இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. தென் மேற்குப் பருவமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்திற்கு மேலே ஒரு காற்றுச் சுழற்சி உருவாகியிருந்தது. வடகிழக்கு இராஜஸ்தான் மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்றும் உருவாகியிருந்தது.

வெஸ்டர்ன் டிஸ்டர்பன்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மேற்கத்திய இடையூறு மற்றும் பருவக்காற்று இடையேயான இந்த இடைவினை 24 முதல் 36 மணி நேரம் வரை நீடித்தது. இது வடமேற்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வழிவகுத்தது.
இத்தகைய சூழ்நிலை தென் மேற்குப் பருவமழையின் ஒரு பகுதியாக நிகழக்கூடும் என்றாலும், இந்தத் தொடர்பு அரிதாகவே கருதப்படுகிறது. “மேற்கத்திய இடையூறுகளுடன் பருவக்காற்றுகளின் தொடர்பு காரணமாக, மழையின் தீவிரம் மற்றும் விநியோகம் மேம்பட்டுள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சிம்லா அலுவலக இயக்குனர் சுரேந்தர் பால் கூறியிருக்கிறார்.
மேற்கத்திய இடையூறுகள் மற்றும் பருவக்காற்றுகள் என்றால் என்ன?
மேற்கத்திய இடையூறு என்பது மத்தியதரைக் கடல் பகுதியில் உருவாகும் புயல் அல்லது குறைந்த காற்றாழுத்தப் பகுதியாகும். மேலும் அவை மத்தியதரைக் கடல் பகுதி, ஈரான், மத்திய கிழக்கு நாடுகள் வழியே பயணித்து, அவை இந்திய துணைக்கண்டத்திற்கு வானிலை மாற்றங்களை கொண்டு வருகின்றன.
மேற்கத்திய தொந்தரவு வட இந்தியாவில் வானிலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த இடையூறுகள் நெருங்கும்போது, அவை நாட்டின் வடமேற்குப் பகுதிகளில் மேக மூட்டம், மழைப்பொழிவு மற்றும் சில சமயங்களில் இமயமலைப் பகுதியின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவை ஏற்படுத்துகின்றன. இவை பெரும்பாலும் டிசம்பர் முதல் மே முதல் வாரம் வரையே ஏற்படுகின்றன. தென் மேற்குப் பருவமழைக்காலத்தில் பொதுவாக ஏற்படுவதில்லை.
தென்மேற்குப் பருவக்காற்று இந்தியப் பெருங்கடலில், நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே உருவாகி இந்தியா முழுவதும் படர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தில் நல்ல மழையைத் தருகிறது.
2013 இமயமலை சுனாமியின் போது என்ன நடந்தது?
2013ஆம் ஆண்டு உத்தரகாண்டில் ஏற்பட்ட ‘இமயமலை சுனாமி’ கனமழை உள்ளிட்ட பல காரணிகளால் தூண்டப்பட்டது. இதற்கான உடனடி காரணம் ஒரு பனிப்பாறை ஏரியைத் தடுத்து நிறுத்தும் ஒரு இயற்கை அணை உடைந்ததே ஆகும். இது இந்த உடனடி நிகழ்வால் மட்டும் ஏற்படவில்லை, மாறாக ஆழமான அடிப்படைக் காரணத்தைக் கொண்டிருந்தது. பேரழிவிற்கு வழிவகுத்த மிகவும் சிக்கலான தொடர் நிகழ்வுகளை விஞ்ஞானிகள் பட்டிலிட்டுள்ளனர்.
கன மழை, வளிமண்டலத்தின் நிலையற்ற தன்மை, பனிப்பொழிவு மற்றும் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பனிப்பாறை உடைப்பு ஆகியவற்றின் கலவையால் அந்தப் பேரழிவு நிகழ்வு நிகழ்ந்தது.
10.07.2023 காலை 0830 மணி அளவில் பதிவான மழை அளவுகளின்படி பஞ்சாபில் – ரோபர் 35, ராஜ்புரா 26, பல்லோவால் 20; ஹரியாணாவில் இஸ்மாயில்பாத் 24, தேஜேவால 22, மண்ட்கோலா 22, பிராதப்னகர் 20; ஹிமாச்சல் பிரதேஷில் பச்சாட் 22, நைனாதேவி 20, சௌரி 19 எனப் பரவலாக அதி கன மழை பெய்துள்ளது.
இப்பகுதிகளில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும் தற்போது இரான் பகுதிகள் மேலே மற்றொரு மேற்கத்திய தொந்தரவு நிலவி வருகிறது. இது இந்தியாவை நோக்கி இன்னும் இரு நாட்களில் நகர்க் கூடும். அப்போது மீண்டும் ஒரு முறை கன மழைக்கான வாய்ப்பிருக்கிறது.