திட்டமிட்டபடி இன்று முற்பகல் 11.50க்கு ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
சூரியனில் உள்ள காந்தப்புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்தியா முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 பே லோட்ஸ் எனப்படும் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன. பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் புள்ளி ஒன்று’ எல்-1 என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்படும்.
குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் இது நிறுத்தப் படும். இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
முன்னதாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வுமையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை அடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது.
தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் திட்டமிட்டப்படி இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
அதித்யா எல் 1 விண்ணில் பாய்வதை முன்னிட்டு, ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா பரமேஸ்வரியம்மன் கோவிலில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஆதித்யா எல்-1 மாதிரியை வைத்து சிறப்பு பூஜை செய்து சாமி தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது: ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முன் அம்மனின் அருள் பெறுவது வழக்கம். சந்திரயான்-3 விண்ணில் ஏவப்பட்டபோது அனைவரது ஆசீர்வாதமும் இருந்தது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி.சி-57 ராக்கெட்டில் ஆதித்யா எல்-1 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது.
சுமார் 1,470 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்ய உள்ளது. பூமியில் இருந்து சூரியனை நோக்கி 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாங்ரேஜியன் பாயின்ட்-1(எல்-1) சுற்று வட்டப்பாதையில் செலுத்தப்படும்.
சந்திரயான்-3 தொடர்பான லேண்ட் ரோவர்கள் நிலவில் வெற்றிகரமாக செயல்படுகிறது. ககன்யான் திட்டம் செயல்படுத்த தயார் நிலையில் உள்ளது. அக்டோபர் முதல் அல்லது 2-வது வாரத்தில், இன்சாட்-3டிஎஸ் ஜி.எஸ்.எல்.வி-மார்க்-2 மூலம் ஏவப்படும். எஸ்.எஸ்.எல்-வி ராக்கெட் அடுத்த மாதம் ஏவப்படும் என்றார்.
ஆதித்யா எல் 1 வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து, இஸ்ரோவுக்கு அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.