
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
நான்காம் நாள் – சென்னை
இந்தியா vs ஆஸ்திரேலியா – 08.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன், ஸ்மித் 46, வார்னர் 41, லபுசேன் 27, மிட்சல் ஸ்டார்க் 28, ஜதேஜா 3/28, குல்தீப் 2/42, பும்ரா 2/35) இந்திய அணியிடம் (விராட் கோலி 85, கே.எல். ராகுல், ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க்)
இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு
பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன் எடுத்தது. ஆறு விக்கட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 11ஆவது ஓவர் முடிவில் 50/1 ரன் எடுத்திருந்தனர். 25ஆவது ஓவர் முடிவில் 110/2; ஆனால் 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டனர்.
இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பும்ரா 60 பந்துகளில் 40 டாட் பந்துகள் வீசினார்; ஜதேஜா 60இல் 38 டாட் பால்; அஸ்வின் 60இல் 32 டாட் பால்; குல்தீப் 60இல் 31 டாட் பால். ஸ்மித், லபுசேன், அலக்ஸ் கேரி ஆகிய மூவரின் விக்கட்டுகளை ஜதேஜா, தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் எடுத்துவிட்டார்.
டக், டக், டக்
இந்திய அணி ஆடத் தொடங்கியதும் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது எட்டாவது முறை. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு, ஜிம்பாபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது நடந்தது. எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுக்க அதனை மார்ஷ் பிடிக்கத்தவறினார்.
The Lady luck smiled at Kholi
அதன் பின்னர் கோலியும் ராகுலும் நிதானமாக ஆடினர். தேவைப்படும்போது ஷாட்டுகள் அடித்து, மீதி நேரத்தில் ஒரு ரன் எடுத்து, தடுத்து ஆடி வெற்றியைக் கிட்டத்தட்ட் ஏட்டியபோது விராட் கோலி, 37.4ஆவது ஓவரில், 85 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுலின் ஸ்கோர் 75. 41.2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து ராகுல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்ட நேர முடிவில் ராகுல் 97 ரன், ஹார்திக் பாண்ட்யா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியோடு இந்திய அணி 2 புள்ளிகள், 0.883 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை ஹைதராபாத்தில் நெதர்லாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறும்