
பகுதி 8 – பிச்சாவரம்
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
பஞ்சவடியில் இருந்து பாண்டிச்சேரி சென்று அங்கே ஊருக்குள் நுழையும் முன்னர் ஒரு அருமையான குளிர்பதன வசதி கொண்ட ஒரு ஹோட்டலில் எங்களது மதிய உணவை முடித்துக்கோண்டோம். பின்னர் அங்கிருந்து புவனகிரியில் எனது நண்பர் திரு இரவிசந்திரன்-புவனா இல்லத்திற்குச் சென்றோம். அவர்களோடு சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அங்கிருந்து பிச்சாவரம் சென்றோம்.
பிச்சாவரம் புவனகிரிக்கும் சிதம்பரத்துக்கும் இடையே, வங்கக் கடலை ஒட்டிய ஒரு பகுதி ஆகும். பித்தர்புரம் என்ற பெயரே, பிச்சாவரம் என்று மருவியது என அறிஞர்கள் கருதுகின்றனர். இவ்வூரில் அலையாத்திக் காடுகள் அல்லது சதுப்புநிலக்காடுகள் அல்லது ஆங்கிலத்தில் மாங்குரோவ் காடுகள் மிகுந்துள்ளன. இங்குள்ள அலையாத்திக் காடே உலகின் இரண்டாவது பெரிய அலையாத்திக் காடு ஆகும்.
பிச்சாவரம் காட்டுப்பகுதியின் பரப்பளவு 2800 ஏக்கர்கள். இப்பகுதி சிறுசிறு தீவுகள் நிறைந்து காணப்படுகிறது. இக்காடுகளுக்கு நிறைய பறவைகள் வலசையாக வருகின்றன. மொத்தம் 41 குடும்பங்களைச் சேர்ந்த 177 வகையான பறவைகள் வருவதாகக் கண்டறியப் பட்டுள்ளது. பிச்சாவரம் காடு கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்கும் நிலம். இந்தச் சதுப்பு நிலங்களில் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது. இந்தக் காட்டில் சுரபுன்னை மரங்கள் (தில்லை மரங்கள்) அடர்ந்திருக்கின்றன. இம்மரத்தின் காய்கள் முருங்கைக்காய் போல் நீண்டிருக்கும். இந்தக் காய்கள் சேற்றில் விழுந்து செடியாகி, சில ஆண்டுகளில் மரமாக வளர்ந்து விடும். பழுத்த இலைகள் நீரில் விழுந்து அழுகி, உணவாகக் கிடைப்பதால், இங்கு மீன், இறால்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பறவைகள் இங்கு வலசை வருகின்றன.
செப்டம்பர் முதல் ஏப்ரல் மாதம் வரை பறவைகளின் வரவு அதிகமாக இருக்கும். குறிப்பாக நவம்பர் முதல் ஜனவரி வரை பிச்சாவரம் வரும் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும். இதற்கு அந்த காலகட்டத்தில் இயற்கையாகவே சுற்றுப்புறத்தில் அதிகரிக்கும் இரை உயிரினங்களே காரணம். மேலும் வெளிநாடுகளில் இருந்து வலசை வர பறவைகள் எடுத்துக்கொள்ளும் கால அளவும் வருடம்தோறும் இங்கு குடியேறும் பறவைகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கிறது.
பிச்சாவரம் காடு கடலூர் மாவட்டம் ‘கிள்ளை’ என்னும் ஊரில் அமைந்திருக்கிறது. சிதம்பரம் நகரில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பிச்சாவரத்துக்கு, பேருந்தில் செல்ல கட்டணம் பத்து ரூபாய். சென்னை, புதுவை, கடலூர் மார்க்கமாக வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் சிதம்பரத்துக்கு வராமல் பி.முட்லூர் அருகே பிரியும் புறவழிச்சாலை வழியாக பிச்சாவரத்துக்கு செல்லலாம்.
பிச்சாவரம் வனப்பகுதியைச் சுற்றிப் பார்க்க, அரசு சார்பில் படகு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகில் ஆறு நபர்களுக்கு 2,800 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள கால்வாய் வழியாக, இந்தப் படகு 45 நிமிடங்களில் வனத்தைச் சுற்றி வரும். துடுப்பு படகில் பயணிக்க நபர் ஒருவருக்கு 75 ரூபாய் கட்டணம். இதில் பயணிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு படகில் ஐந்து பேர் பயணிக்கலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி உண்டு. காட்டின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க, கரையில் கண்காணிப்பு கோபுரம், நவீன மைக்ரோஸ்கோப் வைக்கப்பட்டுள்ளன. உணவகம், பயணிகள் காத்திருப்பு அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விளையாட்டு பூங்கா என, பல்வேறு வசதிகளும் சுற்றுலாத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாங்கள் சென்ற சமயத்தில் கூட்டம் சுமாராக இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்தால் நாம் விரும்பும் படகுக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டும். குறைவாக இருந்தால் படகுகள் குறைவாக இருக்கும். படகோட்டிகள் அதிகப் பணம் கொடுத்தால் இன்னும் அதிக தூரம் அழைத்துச் செல்வதாகக் கூறுவார்கள். ஆனால் அது தேவையில்லை என எனக்குத் தோன்றுகிறது.
இந்தப் பகுதியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது. நடிகர் கமலஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் முதல் காட்சி (‘கல்லை மட்டும் கண்டால்’ பாடல் காட்சி) இங்குதான் படமாக்கப்பட்டது. அதுபோல நடிகர் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளும் இங்கு எடுக்கப்பட்டது.
ஒரு நல்ல படகுப் பயணம் செய்த பின்னர் மீண்டும் நண்பர் வீட்டுக்கு வந்தோம்.