
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஆறாம் நாள் – இரண்டு ஆட்டங்கள் – 10.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டியின் ஆறாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டி தர்மசலாவில் இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கிடையே நடந்தது. அதில் இங்கிலாந்து வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டி ஹைதராபாத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நடந்தது.
இங்கிலாந்து vs வங்கதேசம்
இங்கிலாந்து அணி (364/9, மலான் 140, ஜோரூட் 82, பெயர்ஸ்டோ 52, மெஹதி ஹசன் 4/71, ஷோரிஃபுல் இஸ்லாம் 3/75) வங்கதேச அணியை (48.2 ஓவரில் 227, லிட்டன் தாஸ் 76, ரஹீம் 51, ஹிரிதய் 39, டாப்லி 4/43, வோக்ஸ் 2/49) 137 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பூவாதலையா வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே மட்டையாட வந்த இங்கிலாந்து அணியின் முதல் ஐந்து பேட்டர்கள் மிக அருமையாக ஆடினார்கள். இங்கிலாந்து அணி 49 பந்துகளில் 50 ரன்; 93 பந்துகளில் 100; அதாவது அடுத்த 43 பந்துகளில் அடுத்த 50 ரன்; 152 பந்துகளில் 150 ரன்; 193 பந்துகளில் 200; 216 பந்துகளில் 250; 242 பந்துகளில் 300; 290 பந்துகளில் 350 ரன்; என சீராக ரன் குவித்தது. டேவிட் மலான் 107 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 140 ரன் அடித்தார். இப்படியாக இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 364 ரன் எடுத்தது.
வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன்தாஸ் நன்றாக ஆட்டத்தைத் தொடங்கினார். ஆனால் அவருடன் விளையாடிய முதல் நான்கு பேட்டர்கள் (ஹசன் 1 ரன், ஷண்டோ 0 ரன், ஷாகிப் 1 ரன், மிராஸ் 8 ரன்) அவருக்கு துணை நிற்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆட வந்த பேட்டர்கள் சுமாராக ஆடினர். இருப்பினும் ரன் ரேட் மிகக் குறைவாக் இருந்ததால் இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இலங்கை vs பாகிஸ்தான்
இலங்கை அணியை (344/9, குசால் மெண்டிஸ் 122, சமரவிக்ரம 108, நிசாங்கா 51, ஹசன் அலி 4/71, ஹரிஸ் ரவுஃப் 2/64) பாகிஸ்தான் அணி (48.2 ஓவரில் 345/4, ஷஃபிக் 113, ரிஸ்வான் 131*) ஆறு விக்கட் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இலங்கை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பதுன் நிசாங்கா நிதானமாக ஆடினார் என்றால் குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 122 ரன் அடித்தார். பதுன் ஆட்டமிழந்ததும் மெண்டிஸுக்கு ஜோடியாக ஆட வந்த சமரவிக்ரமா 89 பந்துகளில் 108 ரன் அடித்தார். அதன் பின்னர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். குசால் மெண்டிஸ், சமரவிக்ரமா இருவரும் சதம் அடித்தபோதும் இலங்கை அணியை 50 ஓவர் முடிவில் 344 ரன்னுக்கு பாகிஸ்தான் அணியால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது.
தங்களது இன்னிங்ஸை ஆட வந்த பாகிஸ்தான் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக்கை நாலாவது ஓவரில் இழந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபர் ஆசம் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அப்துல்லா ஷஃபிக் (103 பந்துகளில் 113 ரன்) மற்றும் ரிஸ்வான் (ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 131 ரன்) ஆட்டத்தை பாகிஸ்தான் கைப்பிடிக்குள் கொண்டுவந்தனர். இறுதியில் 48.2 ஓவரில் பாகிஸ்தான் அணி நாலு விக்கட் இழப்பிற்கு 345 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
நாளை டெல்லியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே ஆட்டம் நடைபெறும்.