
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
ஏழாம் நாள் – இந்தியா vs ஆப்கானிஸ்தான் – 11.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஆப்கானிஸ்தான் அணியை (272/8, ஹஷ்மத்துல்லா 80, ஒமராசி 62, பும்ரா 4/39, பாண்ட்யா 2/43) இந்திய அணி (35 ஓவரில் 2 விக்கட் இழப்பிற்கு 273 ரன், ரோஹித் ஷர்மா 131, இஷான் கிஷன் 47, கோலி 55*, ஷ்ரேயாஸ் ஐயர் 25*, ரஷீத் கான் 2/57) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பவர்ப்ளேயான முதல் பத்து ஓவர்களில் ஒரு விக்கட் இழப்பிற்கு 48 ரன் எடுத்தது. ஏழாவது ஓவரில் இப்ராஹிம், 13ஆவது ஓவரில் ரஹமத்துல்லா, 14ஆவது ஓவரில் ரஹமத் ஷா ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஹஷ்மத்துலாவும் ஓமராசியும் இணைந்து ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருப்பினும் பும்ரா, குல்தீப், ஜதேஜா ஆகியோரின் பந்து வீச்சால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 272/8 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. குல்தீப் 39, 41 மற்றும் 43ஆவது ஓவர்களை வீசினார். அவற்றில் ஒரு விக்கட் எடுத்து மொத்தம் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
அதன் பிறகு ஆடவந்த இந்திய அணி தனது வெற்றியை முதல் பத்து ஓவர்களில் அறிவித்துவிட்டது. அந்த 10 ஓவர்களில் இந்திய அணி 94/0; அதில் ரோஹித் ஷர்மா 74 ரன். ரோஹித் 84 பந்துகளில் 16 பவுண்டரி, 5 சிக்சருடன் 131 ரன் எடுத்தார். முதலில் ஆட்டமிழந்தது இஷான் கிஷன். அவர் 47 பந்துகளில் 47 ரன் எடுத்தார். பின்னர் ஆடவந்த கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் தங்கள் பங்குக்கு ஆடி 35 ஓவரில் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் ஏழு சதங்கள் அடித்த முதல் வீரரானார். இன்றைய ஆட்டத்தில் அவர் நாலாவது சிக்சர் அடித்தபோது, ஒருநாள் ஆட்டங்களில் 554 சிக்சர் அடித்து, அதிக சிக்சர் அடித்த வீரரானார்.
இந்த வெற்றியோடு, நாலு புள்ளிகளுடன் இந்திய அணி புள்ளிப்பட்டியலில், 1.5 என்ற ரன்ரேட்டுடன் இரண்டாமிடம் வகிக்கிறது. நாளை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே லக்னோவில் ஆட்டம் நடைபெறும்