
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி – 8ம் நாள்
தென் ஆப்பிரிக்கா vs ஆஸ்திரேலியா
லக்னோ – 12.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
தென் ஆப்பிரிக்கா அணி (311/7, டி காக் 109, மக்ரம் 56, பவுமா 35, மிட்சல் ஸ்டார்க் 2/53, மேக்ஸ்வெல் 2/34) ஆஸ்திரேலிய அணியை (40.5 ஓவரில் 177 ஆல் அவுட், லபுசேன் 46, மிட்சல் ஸ்டார்க் 27, ரபாடா 3/33, ஜேன்சன் 2/54, கேசவ் 2/30, ஷம்சி 2/38) 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று லக்னோவில் நடந்த ஆட்டம் ஒருதலைப் பட்சமான ஆட்டமாக இருந்தது. பூவாதலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். அந்த அணியின் முதல் ஏழு பேட்டர்களும் இரட்டை இலக்க ஸ்கோர் அடித்தனர். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 311 ரன் எடுத்தது.
டாஸ் வென்ற பின்னர் ஆஸ்திரேலியா பந்துவீச எடுத்த முடிவு, அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருக்குப் பதிலாக ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரை அணியில் சேர்த்தது என எதுவும் இன்று ஆஸ்திரேலிய அணிக்குச் செயல்படவில்லை. பந்து வீச்சில் உத்வேகம் இல்லாதது மற்றும் களத்தில் செய்த பல பிழைகள் அவர்களைத் தோல்வியை நோக்கித் துரத்தியது. 18ஆவது ஓவரில் 6 விக்கெட்டுக்கு 70 என்ற நிலையில் அவர்களது வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது. தொடக்க ஆட்டங்களில் இரண்டு நேரான தோல்விகள், இதற்கு மேலும் அவர்கள் மீதமுள்ள ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் அந்த அணியைத் தள்ளியுள்ளது.
ஸ்மித் LBWவில் ஆட்டமிழந்தது ஒரு துரதிர்ஷ்டம். ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்ததும் இத்தகைய ஒரு முடிவினால்தான்.
டி காக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் சிறந்த ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நாளை சென்னையில் வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது.