
பகுதி 9 – வேதபுரீஸ்வரர், வைத்தீஸ்வரர்
–முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் —
நண்பர் வீட்டிலிருந்து அவரது குடும்பத்தினருடன் புவனகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடலூர் செல்லும் பாதையில் சுமார் 1.5 கிலோமீட்டர் தூரத்தில், மேல்புவனகிரி வேதபுரீஸ்வரர் கோயில் என்ற சிவபெருமான் திருக்கோவிலுக்குச் சென்றோம். இந்தக் கோவில் ஹஸ்த நட்சத்திரக்கார்களுக்கு உரிய கோயில் என்று கூறுகிறார்கள்.
இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. பெரிய சிற்பங்கள் எதுவும் இல்லாத ஒரு கோயில். இக்கோயிலில் வேதபுரீஸ்வரர், மீனாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேசுவரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ‘காமிகாகம்’ என்பது தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும்.
நான் சென்ற தினம் ஒரு பிரதோஷ தினம். எனவே சுமார் 50/60 பேர் கோயிலில் இருந்தனர். நந்தியம்பெருமாளுக்கு அபிஷேக ஆராதானைகள் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் ருத்ரம் ஓதி நிதானமாக நந்தியம்பெருமாளுக்கு அபிஷேகம் செய்தனர். அமைதியான கிராமக் கோயில். மன நிறைவோடு நண்பர் வீடு திரும்பி இரவு ஓய்வு எடுத்தோம்.
அடுத்த நாள் காலை எழுந்து குளித்து முடித்து, கார் ஓட்டுநரையும் குளிக்கச் சொல்லி, நண்பர் வீட்டில் அருமையான காபி அருந்திவிட்டு கண்டியூர் நோக்கிப் புறப்பட்டோம். வழியில் வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதர் கோவிலில் சுவாமியைத் தரிசிக்க இறங்கினோம்.
இத்திருத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், இராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் பெயர் முத்துக்குமார சுவாமி. இவன்மீது முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பாடப்பட்டுள்ளது.
வேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூராகிய வைத்தீஸ்வரங்கோயிலின் சங்ககாலப் பெயர். அகநானூற்றில் 166ஆவது பாடலில் இதனைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. ‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.
இது ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான புதன் கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தலமாகும். அங்காரகன் தொழுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது.
வைத்தீசுவரன் என்பது தமிழில் மருத்துவக் கடவுள் என்ற பொருளை உணர்த்துவது ஆகும். இக்கடவுளை வழிபடுவோர் நோய்நொடி நீங்கி வாழ்வர் என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகின்றது. இக்கடவுள் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார். இக்கோயிலில் அமைந்திருக்கும் சித்தாமிர்தக் குளத்தின் நீர் புனித நீராக கருதப்படுகின்றது. இக்குளத்தில் நீராடினால் நோய் நீங்கும் என்று அங்கு வழிபடும் மக்களால் நம்பப்படுகின்றது.
சம்பாதி, சடாயு, என்ற இராமாயண கால கழுகரசர்கள் இருவரும், முருகப்பெருமானும் பூசித்துப் பேறுகளைப் பெற்ற தலமாக இது கருதப்படுகிறது. ஒன்பது கிரகங்களுள் (நவக்கிரகம்) ஒன்றான அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார். ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோயில் தலமாக விளங்குகின்றது.
இக்கோயிலில் வைத்தீசுவர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர். இக்கோயிலுக்கு இராமர், இலட்சுமணன் மற்றும் சப்தரிஷிகளும் வந்து வணங்கியதாக செவிவழிச் செய்திகள் உண்டு. இக்கோயிலில் அமைந்துள்ள குளத்தை சடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது. இக்கோயிலினுள் தன்வந்தரியும், தமிழ்க்கடவுளாம் முருகன் முத்துகுமாரசாமியாகவும் எழுந்தருளியுள்ளனர்.
இரண்டு கொடிமரங்கள், வரிசையாக அமைந்திருக்கும் நவகிரக சன்னதி என பல சிறப்புகள் உடையது இக்கோயில். மிகப் பெரிய கோயில்; எனவே அனைத்து சன்னதிகளையும் பார்த்து, கோயிலைச் சுற்றிவர சுமார் 45 நிமிடங்கள் வரை ஆகும். எங்கள் குடும்பத்தில் குழந்தைகளுக்கு முதல் மொட்டை இக்கோயிலில்தான் போடுவார்கள்.
கோயிலில் தரிசனம் முடித்த பின்னர் நாங்கள் எங்களின் குலதெய்வக் கோயிலான கண்டியூர் நோக்கிச் சென்றோம். வழியில் மயிலாடுதுறையில் உறவினர் ஒருவர் வீட்டில் காலைச் சிற்றுண்டியை முடித்தோம்.