spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாநாகை - காங்கேசன்துறை படகு சேவை தொடக்கம்: பிரதமர் மோடியின் உருக்கமான உரை!

நாகை – காங்கேசன்துறை படகு சேவை தொடக்கம்: பிரதமர் மோடியின் உருக்கமான உரை!

- Advertisement -

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

pm narendra modi

தமிழாக்கம்: முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மாண்புமிகு தலைவர்களே, சகோதர சகோதரிகளே, நமஸ்காரம், ஆயுபோவன், வணக்கம்!

நண்பர்களே, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் உங்களுடன் இணைவது எனது பாக்கியம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பித்துள்ளோம். நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பது எமது உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான மைல்கல்.

நண்பர்களே, இந்தியாவும் இலங்கையும் கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் நாகரிகத்தின் ஆழமான வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. நாகப்பட்டினம் மற்றும் அருகிலுள்ள நகரங்கள் இலங்கை உட்பட பல நாடுகளுடன் கடல் வணிகத்திற்கு நீண்ட காலமாக அறியப்படுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் பூம்புகார் துறைமுகம் ஒரு மையமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க கால இலக்கியங்களான பட்டினப்பாலை, மணிமேகலை போன்றவை இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே செல்லும் படகுகள் மற்றும் கப்பல்கள் பற்றிப் பேசுகின்றன. மகா கவி சுப்பிரமணிய பாரதி தனது ‘சிந்து நதியின் மிசை’ பாடலில் நமது இரு நாடுகளையும் இணைக்கும் பாலம் பற்றிப் பேசியிருந்தார். இந்த படகுச் சேவையானது அந்த வரலாற்று மற்றும் கலாச்சார தொடர்புகளை உயிர்ப்பிக்கிறது.

நண்பர்களே, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் சமீபத்திய விஜயத்தின் போது, எமது பொருளாதார பங்காளித்துவத்திற்கான தொலைநோக்கு ஆவணத்தை கூட்டாக ஏற்றுக்கொண்டோம். இணைப்பு என்பது இந்தக் கூட்டாண்மையின் மையக் கருப்பொருள். இணைப்பு என்பது இரண்டு நகரங்களை நெருக்கமாகக் கொண்டுவருவது மட்டுமல்ல. இது நம் நாடுகளை நெருக்கமாகவும், நம் மக்களை நெருக்கமாகவும், நம் இதயங்களை நெருக்கமாகவும் கொண்டு வருகிறது. இணைப்பு வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துகிறது. இது இரு நாட்டு இளைஞர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

நண்பர்களே, 2015இல் நான் இலங்கைக்கு விஜயம் செய்ததைத் தொடர்ந்து, டெல்லிக்கும் கொழும்புக்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்பட்டதை நாங்கள் கண்டோம். பின்னர், இலங்கையிலிருந்து புனித யாத்திரை நகரமான குஷிநகரில் முதல் சர்வதேச விமானம் தரையிறங்கியதைக் கொண்டாடினோம். சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை 2019இல் தொடங்கியது. இப்போது, நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே படகுச் சேவை இந்த திசையில் மற்றொரு முக்கியமான படியாகும்.

நண்பர்களே, இணைப்புக்கான எங்கள் பார்வை போக்குவரத்து துறைக்கு அப்பாற்பட்டது. இந்தியாவும் இலங்கையும் ஃபின்-டெக் மற்றும் எரிசக்தி போன்ற பரந்த அளவிலான துறைகளில் நெருக்கமாக ஒத்துழைக்கின்றன. UPI காரணமாக இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துதல் ஒரு வெகுஜன இயக்கமாகவும் வாழ்க்கை முறையாகவும் மாறியுள்ளது. UPI மற்றும் Lanka Payஐ இணைப்பதன் மூலம் fin-tech துறை இணைப்பில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். நமது வளர்ச்சிப் பயணத்தை வலுப்படுத்த நமது நாடுகளுக்கு ஆற்றல் பாதுகாப்பு முக்கியமானது. எரிசக்தி பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த எங்கள் எரிசக்தி கட்டங்களை இணைக்கிறோம்.

நண்பர்களே, முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டு என்பது நமது இருதரப்பு உறவின் வலுவான தூண்களில் ஒன்றாகும். யாரையும் விட்டு வைக்காமல், வளர்ச்சியை அனைவருக்கும் எடுத்துச் செல்வதே எங்கள் பார்வை. இந்த தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கையில் இந்திய உதவியுடன் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மக்களின் வாழ்க்கையைத் தொட்டன.

வடக்கு மாகாணத்தில் வீடுகள், நீர், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார ஆதரவு தொடர்பான பல திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. காங்கேசன்துறை துறைமுகத்தை மேம்படுத்துவதற்கு நாங்கள் ஆதரவை வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ரயில் பாதைகளை சீரமைத்தல், யாழ் கலாசார நிலையத்தை நிர்மாணித்தல்; இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன்ஸ் சேவையை நடைமுறைப் படுத்துதல்; அல்லது டிக் ஓயாவில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையை அமைத்தல் என அந்தத் திட்டமாக இருந்தாலும் நாங்கள் “அனைவருடனும்- அனைவரின் வளர்ச்சிக்காகவும்-அனைவரின் நம்பிக்கையுடனும்-அனைவரின் முயற்சியுடனும்” என்ற பார்வையுடன் பணியாற்றி வருகிறோம்.

நண்பர்களே, சமீபத்தில் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்தியது அனைவரும் அறிந்ததே. “வசுதைவ குடும்பகம்” அதாவது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற எங்களது தொலைநோக்கு சர்வதேச சமூகத்தால் வரவேற்கப்பட்டது. இந்த பார்வையின் ஒரு பகுதி, நமது அக்கம்பக்கத்திற்கு முதலிடம் கொடுப்பது; முன்னேற்றம் மற்றும் செழுமையைப் பகிர்வது. ஜி20 மாநாட்டின் போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்பட்டது. இது ஒரு முக்கியமான இணைப்பு வழித்தடமாகும், இது முழு பிராந்தியத்திலும் பாரிய பொருளாதார தாக்கத்தை உருவாக்கும்.

எமது இரு நாடுகளுக்கிடையிலான பலதரப்பட்ட தொடர்பை நாம் வலுப்படுத்துவதால் இலங்கை மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள். இன்று படகுச் சேவையை வெற்றிகரமாக ஆரம்பித்தமைக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படகுச் சேவை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கிடையிலான படகு சேவையை மீண்டும் ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நண்பர்களே, எமது மக்களின் பரஸ்பர நலனுக்காக எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கையுடன் நெருக்கமாக செயற்படுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. நன்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe