
உலகப் பிரபலமான இந்திய ரயில்வேயில் முக்கிய அங்கம் வகிக்கும் செங்கோட்டை – புனலூர் மலை வழி ரயில் பாதையில் மின் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக நடந்து வரும் இப்பணி தற்போது 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக இப்பணியை மேற்கொள்பவர்கள் கூறுகின்றனர். ஆரியங்காவு கணவாய் தென்மலை கணவாய் பகுதியில் மின் வயர் பொருத்தும் பணிகள் நவீன இயந்திரங்களுடன் நடந்து வருகிறது.
கடந்த இரு நாட்களாக பெய்து வரும் மழையை பொருட்படுத்தாது ஊழியர்கள் இப்பணியை செம்மையாக செய்து வருகின்றனர். வரும் மார்ச் மாதத்திற்குள் விருதுநகர் – செங்கோட்டை – புனலூர் – கொல்லம் ரயில் வழிப் பாதையில் மின்மயமாக்கல் பணி முழுமையாக நடந்து விடும் எனக் கூறப்படுகிறது.
அதற்கு முன்னதாகவே சோதனை ஓட்டம் துவங்கி, கொல்லம் – செங்கோட்டை – மதுரை வழித்தடத்தில் மின் ரயில்கள் இயங்கும். புதிய மின்சார ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என ஏற்கெனவே மதுரை கோட்ட ரயில்வே பொது மேலாளர் அண்மையில் புனலூரில் தெரிவித்திருந்தார்.
இந்த வழிப் பாதையில் மின்மயமாக்கல் முடிந்ததும் செங்கோட்டை – விருதுநகர் இடையே இரட்டை ரயில் பாதை பணி அமைக்க வேண்டும் என கேரளா எம்பிக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே, வரும் அக்.18ம் தேதி புதன்கிழமை முதல், திருநெல்வேலி – செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வரும் ரயில்கள் மூன்று, மின்சார இஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. வண்டி எண் 06681 / 06682, வண்டி எண் 06684/06687 , வண்டி எண்:06657/06658 ஆகிய மூன்று வண்டிகளும் மின்சார எஞ்சின் பொருத்தப்பட்டு இயக்கப்படவுள்ளது.
இது குறித்து, செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் கே.ஹெச். கிருஷ்ணன் கூறியபோது, “நாங்கள், 12/10/23 அன்று மின்னஞ்சல் மூலமாக தெற்கு ரயில்வே பொது மேலாளர்,ரயில்வே அமைச்சர் அலுவலகம் (தில்லி), மத்திய அமைச்சர் முருகன், மதுரை கோட்ட மேலாளர், தெற்கு ரயில்வே உயரதிகாரிகள், தென்காசி எம்.பி., தனுஷ்குமார், மதுரை நெல்லை விருதுநகர் எம்.பி.க்கள், பாஜக., தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு – வெற்றிகரமாக மார்ச் 2023ல் மின்சார லோக்கோ இயக்க சோதனைகள் முடிந்த —செங்கோட்டை – தென்காசி – விருதுநகர் மற்றும் செங்கோட்டை – தென்காசி – திருநெல்வேலி பாதைகளில் எப்போது ரயில்கள் மின்சார லோக்கோக்களால் இயக்கப்படும் என்று தெரிவிக்க வேண்டும் – என்று கேட்டிருந்தோம் . இன்று தெற்கு ரயில்வே அதிகார பூர்வமாக 18/10/23 முதல் செங்கோட்டை – திருநெல்வேலி இடையே சில ரயில்கள் மின்சார லோக்கோவால் இயக்கப்படும் என்ற மகிழ்வான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைத்து தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் நன்றி” என்று கூறினார்.
முன்னதாக, மதுரையில் கடந்த அக்.9ம் தேதி, புதியதாக மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம், மதுரை செங்கோட்டை – புனலூர் – கொல்லம் வழித்தடத்தில் மின்சார ரயில் இயக்கவும், செங்கோட்டை – சென்னை சிலம்பு அதிவிரைவு ரயிலை கொல்லம் வரை நீட்டித்து, கூடுதல் பெட்டிகள் இணைத்து, தினசரி ரயிலாக இயக்கவும்,எற்கெனவே கடந்த சபரிமலை சீசனுக்கு இயக்கிய எர்ணாகுளம் – செங்கோட்டை – ராஜபாளையம் – விருதுநகர் – காரைக்குடி – தாம்பரம் சிறப்பு ரயிலை இந்த ஆண்டு சபரிமலை சீசன் துவங்கும் முன் தினசரி ரயிலாக இயக்கவும் வலியுறுத்தப்பட்டது.