
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
பதிமூன்றாம் நாள்
தென் ஆப்பிரிக்கா vs நெதர்லாந்து
தர்மசலா – 17.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நெதர்லாந்து அணி (43 ஓவரில் 245, ஸ்காட் எட்வர்ட்ஸ் 78*, வான் டெர் மெர்வ் 29, ஆர்யன் தத் 23, இங்கிடி 2/57, யான்சென் 2/27, ரபாடா 2/56) தென் ஆப்பிரிக்க அணியை (42.5 ஓவரில் 207, டேவிட் மில்லர் 43, கேசவ் மஹராஜ் 40, க்ளாசன் 28, ஜெரால்ட் கோட்ஸி 22, வான் பீக் 3/60, மீகிரன் 2/40, மெர்வீ 2/34, லீட் 2/33) 38 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தர்மசலாவில் பெய்த மழையால் ஆட்டம் இன்று தாமதமாகத் தொடங்கியது. இதனால் ஆட்டம் 43 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
முதலில் மட்டையாட வந்த நெதர்லாந்து அணிக்கு அதன் வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 27ஆவது ஓவர் முடிவில் அந்த அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 140 ரன் எடுத்திருந்தது. ஆனால் அணித்தலைவர் ஸ்காட் எட்வர்ட்ஸ் கடைசி இரண்டு ஆட்டக்காரர்களான வான் டெர் மெர்வ் மற்றும் ஆர்யன் தத் இருவருடனும் இணைந்து அணியின் ஸ்கோரை 43 ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 245 ரன்னுக்கு உயர்த்தினார்.
246 என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி எளிதில் அடைந்துவிடும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் க்விண்டன் டி காக் (20 ரன்), பவுமா (16 ரன்) இருவரும் பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்ஸ்தனர். அதன் பின்னர் மர்க்ரம் (1 ரன்), டுஸ்ஸன் (4 ரன்) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கிளாசனும் டேவிட் மில்லரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிக்கொண்டிருந்தனர்.
ஆனால் நெதர்லாந்தின் வான் பீக் அவர்கள இருவரையும் ஆட்டமிழக்கச் செய்தார். அதுவரை ரன்ரேட் நெதர்லாந்து அணியின் ரன்ரேட்டை ஒட்டியே இருந்தது; அதற்கு பின்னர் நெதர்லாந்து அணி பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்கா அணியின் ரன்ரேட் மிகக் குறைந்து கடைசி ஓவரில் 49 ரன்கள் அடிக்க வேண்டிய நிலை வந்தது. அந்த ஓவரில் கேசவ் மகராஜ் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்சர் அடித்தார்; இருப்பினும் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் நெதர்லாந்து அணி இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றது.
நெதர்லாந்து இதற்கு முன்னர் 2003 உலகக்கோப்பை ஆட்டமொன்றில் நமீபிய அணியை 64 ரன் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. 2007இல் ஸ்காட்லாந்து அணியை 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.
உலகக் கோப்பை ஆட்டமின்றில் தென் ஆப்பிரிக்க அணியை வெல்வது இதுவே முதல் முறை. சென்ற வருடம் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணி வென்றது நினைவிருக்கலாம்.
ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே சென்னையில் ஆட்டம் நடைபெறும்.