
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
26ஆம் நாள் – இலங்கை vs ஆப்கானிஸ்தான்
புனே – 30.10.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இலங்கை அணியை (49.3 ஓவர்களில் 241, பதும் நிசாங்கா 46, குசல் மெண்டிஸ் 39, சமரவிக்ரமா 36, அசலங்கா 22, ஆஞ்சலா மேத்யூஸ் 23, தீக்ஷனா 29, ஃபரூக்கி 4/34, முஜிபுர் ரஹ்மான் 2/38) ஆப்கானிஸ்தான் அணி (45.2 ஓவரில் 242/3, ஒமரசி 73*, ரஹ்மத் ஷா 62, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 58*, இப்ராஹிம் சத்ரன் 39, மதுஷங்கா 2/48) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் 241 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இலங்கையின் இன்னிங்ஸ் சற்றுக் கட்டுப்பாட்டைப் பெற்ற பிறகு சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை.
முதல் பந்திலிருந்தே அற்புதமாக பந்துவீசி இதைச் செய்த ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களுக்கு இந்தப் பெருமை போய்ச்சேரும். நல்ல தொடக்கங்களை கணிசமான ஸ்கோராக மாற்ற முடியாமல் இலங்கை திணறியது. ஃபசல்ஹக் ஃபாரூக்கி புதிய பந்தில் அற்புதமாக பந்துவீசினார், அதே போல் கடைசி ஓவர்களிலும் அனல் பறக்கவிட்டார். சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் போல் சிறப்பாக இருந்தனர், முஜீப் தனது ஆட்டத்தில் சிறந்து விளங்கினார், மொத்தத்தில் இது ஒரு முழுமையான பந்துவீச்சு செயல்திறனாக இருந்தது.
பதும் நிசாங்கா 46 ரன்களுடன் அதிகபட்ச ஸ்கோராக உள்ளார். ஆனால் அவர் கியர்களை மாற்ற முயற்சித்த போது, ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் நம்பிக்கைக்குரிய தொடக்கங்களைப் பெற்றனர்,
ஆனால் அழுத்தம் இடைவிடாமல் இருந்ததால், முக்கியமான தருணங்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அனுபவமிக்க வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோருக்கு இடையேயான ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப் இலங்கைக்கு சற்று உதவியது.
ஆப்கானிஸ்தான் அணி 242 ரன் என்ற இலக்கை அடைய துல்லியமான மற்றும் தொழில்முறை முறையில் அணுகினர். முன்னதாக, அவர்கள் பதற்றத்தில் விரைவாகவே அதிரடி ஆட்டத்தை ஆட நினைத்து அதிக ஆபத்தான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது வழக்கம். அதனால் அடிக்கடி கொத்தாக விக்கெட்டுகளை இழப்பதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
ஆனால், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த உற்சாகமான அணியில் புதிய அமைதி மற்றும் தன்னம்பிக்கை உணர்வு உள்ளது. மேலும் அவர்கள் பலவீனமாக அடிபணியும் அணி அல்ல என்பதை பிறருக்கு உணர்த்தியுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் தேவையான போது நிதானத்தை வெளிப்படுத்தியது மற்றும் நிலையான ரன் ரேட்டையும் பராமரித்தது. இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் அற்புதமான நிலைத்தன்மை உடைய அணியாக மாறியிருக்கிறது.
தொடக்க வீரர் குர்பாஸ் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தபோதும், அதன் பின்னர் இப்ராஹிம் சத்ரன் (39 ரன்), ரஹ்மத் ஷா (62 ரன்), ஹஸ்மத்துல்லா ஷஹீதி (ஆட்டமிழக்காமல் 58), அஸ்மத்துல்லா ஒமரசி (ஆட்டமிழக்காமல் 73) என சிறப்பாக ஆடி ஆப்கானிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளனர். ஃபசல்ஹக் ஃபாரூக்கி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
அனைத்து அணிகளும் ஆறு ஆட்டங்கள் ஆடியுள்ள நிலையில் இந்திய அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து-8 புள்ளிகள்-3ஆம் இடம், ஆஸ்திரேலியா-8 புள்ளிகள்–4ஆம் இடம், ஆப்கானிஸ்தான்-6 புள்ளிகள் -5ஆம் இடம், இலங்கை-4 புள்ளிகள் -6ஆம் இடம், பாகிஸ்தான்-4 புள்ளிகள் -7ஆம் இடம், நெதர்லாந்து-4 புள்ளிகள் -8ஆம் இடம், வங்கதேசம்-2 புள்ளிகள் -9ஆம் இடம், இங்கிலாந்து -2 புள்ளிகள் -10ஆம் இடம் வகிக்கின்றது.