
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
30ஆம் நாள் – நெதர்லாந்து vs ஆப்கானிஸ்தான்
லக்னோ – 03.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நெதர்லாந்து அணியை (46.3 ஓவர்களில் 179, சைபிராண்ட் எங்கல்பிரக்ட் 59, மேக்ஸ் ஓ டவுட் 42, காலின் ஆக்கர்மேன் 29, முகம்மது நபி 3/28, நூர் அகமது 2/31) ஆப்கானிஸ்தான் அணி (31.3 ஓவரில் 181/3, ரஹமத் ஷா 52, ஹஷ்மத்துல்லா ஷஹீதி 56*, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் 31*, வான் பீக் 1/30, மெர்வீ 1/27, சுல்ஃபிகர் 1/21) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற நெதர்லாந்து அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. முதல் ஓவரிலேயே அந்த அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். 11ஆவது ஓவர் முடிவில் ஒரு விக்கட் இழப்பிற்கு 72 ரன் என்ற நிலையில் இருந்த நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளும் இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது .
அந்த அணியின் பேட்டர்களின் தடுமாற்றத்தையும் ஆப்கானிஸ்தான் அணியின் அருமையான ஃபீல்டிங்கையும் இந்த இன்னிங்க்ஸ் முழுவதும் காணமுடிந்தது. நாலு ரன் அவுட்டுகள் என்பது ஒரு போட்டியில் நடக்கும் விஷயமல்ல.
இரண்டாவதாக ஆடவந்த ஆப்கானிஸ்தான் அணி 180 ரன் என்ற இலக்கை பதற்றமின்றி எளிதாக அடைந்தது. ரஹமத் ஷா (52 ரன்), ஹஷ்மத்துல்லா ஷஹீதி (ஆட்டமிழக்காமல் 56 ரன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய் (ஆட்டமிழக்காமல் 31 ரன்) ஆகியோரின் ஆட்டத்தினால் அந்த அணி 31.3 ஓவரில் மூன்று விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்து நெதர்லாந்து அணியை 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் முகம்மது நபி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுடன் புள்ளிக் கணக்கில் ஒன்றாக உள்ளது.
நாளை இரண்டு ஆட்டங்கள் நடக்க உள்ளன. முதலாவது ஆட்டம் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பெங்களூருவில் பகல் நேர ஆட்டமாக நடைபெறும்.
இரண்டாவது ஆட்டம் ஆஸ்திரேலியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லுமா என்பதை நாளைய ஆட்டங்கள் முடிவுசெய்யும்.