மதுப்பழக்கம் இல்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் கலந்தது எப்படி என்று சுப்பிரமணியன் சுவாமி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு துபையில் மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் பல சந்தேகங்களை எழுப்புகின்றனர் பலர். பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஆல்கஹால் கலந்த மதுவகைகளை அருந்தும் பழக்கமில்லாத ஸ்ரீதேவியின் உடலில் ஆல்கஹால் வந்த்து எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஹோட்டலின் சிசிடிவி பதிவுகளுக்கு என்ன நேரிட்டது எனவும் அவர் கேட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார் என டாக்டர்கள் திடீரென சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, ஊடகங்களில் வெளியாகும் செய்திகளிலும் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும், பாலிவுட் நடிகைகளுக்கும் தாவூத் இப்ராகிமிற்கும் உள்ள தொடர்புகள் பற்றியும் யோசிக்க வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
முன்னதாக, ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தபோது, ஸ்ரீதேவியின் மரணம் ஒரு திட்டமிட்ட கொலையாகக் கூட இருக்கலாம் என சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்திருந்தார்.
இதனிடையே 5.7 அடி உயரமுள்ள ஒரு பெண்மணி எப்படி 6 அடி கொண்ட பாத் டப்பில் மயங்கிக் கிடந்திருக்க முடியும் என்று ஊடகங்களில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஊடக விவாதங்களில் குடித்து விட்டு மயக்கம் அடைந்து தண்ணீர்த் தொட்டியில் விழுவாரா என்பதில் சந்தேகம் உள்ளது என்கின்றனர்.
இவ்வளவு நல்ல உயரம் கொண்டவர் தண்ணீர்த் தொட்டிக்குள் மயங்கிக் கிடந்திருக்க முடியாது என்று கூறும் சிலர், அது ஒன்றும் நீச்சல் குளம் அல்ல, குளியல் தொட்டிதான் என்கின்றனர்.
ஒருவர் மது அருந்தியிருந்தாலும் கூட, அந்த இரவு நேரத்தில் குளியலறைக்குச் சென்று குளிக்க முயற்சி செய்ய மாட்டார்கள் என்று கூறும் சிலர், இதில் சந்தேகப் படும் படியாக ஏதோ நடந்திருக்கிறது என்பதை மட்டும் பதிவு செய்கின்றனர்.
அதிகப்படியான மாத்திரைகள் அல்லது ஆல்கஹால்? எப்படி இருந்தாலும், மாரடைப்பு ஏற்பட்டு அதனால் மயக்கம் வந்து அதன் பின் அவர் தண்ணீர்த் தொட்டியில் விழுந்திருக்கலாம் என்றாலும், அவர் உயிரிழந்து பின்னர் குளியல் தொட்டியில் விழுந்திருந்தால், நுரையீரலுக்குள் தண்ணீர் போயிருக்காது. அப்போதும் அது கொலை அல்லது மாத்திரைகள் அதிகம் உட்கொண்டதால் ஏற்பட்ட மயக்க நிலையினால் இருக்கும். அப்படி இல்லாமல், நீர்த் தொட்டிக்குள் விழுந்து அதன் பின் மயக்கம் வந்திருந்தால், அவரது நுரையீரலுக்குள் தண்ணீர் புகுந்திருக்கும். இவை எல்லாம் உடற்கூறாய்வில் வெளிப்பட்டிருக்கும்… என்று கூறும் சிலர், ஸ்ரீதேவி மரண விவகாரத்தில் பல கதைகள் சொல்லப் படுவது சந்தேகத்தை அதிகப் படுத்துகிறது என்கின்றனர்.
ரூம் பாய் தான் முதலில் ஸ்ரீதேவி பாத்ரூம் தரையில் மயங்கிக் கிடந்ததைப் பார்த்துள்ளான் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. அதே நேரம், அவரது கணவர் போனி கபூர் தான் மாலை 6 மணி அளவில் அவரது உடலைக் கண்டதாகவும், அதன் பின்னர் 9 மணி அளவில்தான் போலீஸாருக்கு தகவல் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இது பல்வேறு சந்தேகங்களை தோற்றுவிக்கிறது என்று ஊடகங்களில் விவாதம் சூடு கிளம்பியுள்ளது.
போனி கபூர் எந்நாளும் ஸ்ரீதேவியை ஒரு மனைவியாகப் பார்த்ததில்லை, அவரது உரிமையாளராகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் சிலர்.
எது எப்படியோ, ஒரு நடிகையின் மரணம் மீண்டும் பலவித அனுமானங்களுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.