
ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
39ஆம் நாள் – இந்தியா vs நெதர்லாந்து
பெங்களூரு – 11.11.2023
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இந்திய அணி (410/4, ஷ்ரேயாஸ் ஐயர் 128*, கே.எல்.ராகுல் 102, ரோஹித் ஷர்மா 61, ஷுப்மன் கில் 51, விராட் கோலி 51, டி லீட் 2/82) நெதர்லாந்து அணியை (47.5 ஓவரில் 250, நிடமானுரு 54, எங்கல்ப்ரக்ட் 45, ஆக்கர்மேன் 35, மேக்ஸ் ஓ டவுட் 30, பும்ரா 2/33, சிராஜ் 2/29, குல்தீப் 2/41, ஜதேஜா 2/49, கோலி 1/13, ரோஹித் ஷர்மா 1/7) 160 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆட்னார்கள். ரோஹித் ஷர்மா 61 ரன், ஷுப்மன் கில் 51 ரன், விராட் கோலி 51 ரன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 128 ரன், கே.எல்.ராகுல் 102 ரன் என அனைவரும் சிறப்பாக ஆடினார்கள். இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன் எடுத்தது. அடுத்த 10 ஓவர்களில் 49 ரன் எடுத்தது. இந்தக் கட்டத்தில் விராட் கோலி சற்று தடுமாறினார். அவர் தான் சந்தித்த முதல் 18 பந்துகளில் 7 ரன் மட்டுமே அடித்தார். அடுத்த 35 பந்துகளில் 43 ரன் அடித்து அரை சதம் பூர்த்தி செய்தார்.
21 முதல் 30 ஓவர் வரை 71 ரன்னும் 31 முதல் 40 ஓவர் வரை 73 ரன்னும் அடிக்கப்பட்டது. கடைசி 10 ஓவர்களில் 126 ரன் அடிக்கப்பட்டது. கே.எல். ராகுல் 64 பந்துகளில் 102 ரன் அடித்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கட் இழப்பிற்கு 410 ரன் எடுத்தது.
கடினமான இலக்கை அடைய பேட்டிங் செய்ய வந்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர் வெஸ்லி பரேசி (4 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் நன்றாகவே ஆடினர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்த்து அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.
இன்று எப்போதும் பந்துவீசுபவர்களைத் தவிர விராட் கோலி, ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ரோஹித் ஷர்மா ஆகியீரும் பந்துவீசினர். அதில் விரால் கோலி, ரோஹித் ஷர்மா இருவரும் தலா ஒரு விக்கட் எடுத்தனர். நெதர்லாந்து வீரர்களால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை; ஆனால் ஆட்டத்தை 48ஆவது ஓவர் வரை இழுத்தனர்.
இறுதியில் 47.5 ஓவரில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர். இந்திய அணி 160 ரன் கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தனது லீக் ஸ்டேஜில் அனைத்து ஆட்டங்களையும் வெல்வது இதுவே முதல் முறை.
இந்திய அணி 18 பிள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முதல் அரையிறுதி ஆட்டம் மும்பையில் வருகின்ற 15ஆம் தேதி இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெறும்.