
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்
உதயகிரி, கந்தகிரி மலைகளையும் அங்கே இருந்த கல்வெட்டுக்களையும் பார்த்துவிட்டு இரவு விடுதியில் ஓய்வெடுத்தோம். அடுத்தநாள் காலை சுமார் 0630 மணியளவில் விடுதியைக் காலிசெய்துவிட்டு புறப்பட்டோம். முதலில் லிங்கராஜா கோயிலுக்குச் சென்றோம். லிங்கராஜா கோயில், கோயில் நகரம் என அழைக்கப்படும் புவனேஸ்வரில் உள்ள மிகப் பழைய கோயில்களுள் ஒன்றாகும். லிங்கராஜர் என்பது லிங்கங்களின் அரசர் என்ற பொருள் தருகிறது.
வரலாறு
இது 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்தது. இதன் தற்போதைய அமைப்பில், பொது சகாப்தம் (பொ.ச) 11ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் இருந்ததாகத் தெரிய வருகிறது. ஆனால், இக் கோவிலின் பகுதிகள் பொ.ச ஆறாம் நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சில சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. லிங்கராஜர் கோயில் கட்டப்பட்ட காலத்தில் விஷ்ணுவின் ஒரு வடிவமான ஜகந்நாதர் வழிபாடும் வளர்ச்சியடைந்து வந்தது. லிங்கராஜர் கோயிலில் விஷ்ணு சிவன் ஆகிய இரு கடவுளரதும் வழிபாடுகள் ஒன்றாக அமைந்திருப்பது இதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதிகிறார்கள்.
இக்கோயில், 11ஆம் நூற்றாண்டில் சந்திர குல மன்னரான ஜஜதி கேசரி என்பவரால் கட்டப்பட்டது என மரபுவழியாக நம்பப்படுகின்றது. எனினும் இதற்கான நம்பத்தகுந்த வரலாற்றுச் சான்றுகள் இல்லை. 11ஆம் நூற்றாண்டில் ஜஜதி கேசரி தனது தலை நகரத்தை ஜெய்ப்பூரில் இருந்து ஏகாம்பர க்ஷேத்ரம் என பிரம்ம புராணத்தில் விவரிக்கப்பட்ட புவனேஸ்வருக்கு மாற்றினான். கோவிலில் காணப்படும் குறிப்புகள் பொ.ச 1114-1115இல் ஆண்ட அனந்தவர்மன் சோடகங்கா என்பவனுடைய காலத்தில் இந்தக் கோவில் கட்டுவதற்காக நிலம் மான்யமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவிக்கின்றன. இந்தக் கோவில் 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கோயிலின் மற்ற பகுதிகளான ஜக்மோகனா (வழிபாட்டுக் கூடம்), போக மண்டபம் (காணிக்கை மண்டபம்), நாட்டிய மண்டபம் ஆகியவை அதன் பிறகு கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
கோயில் அமைப்பு
இதுதான் இந்த ஊரில் அமைந்துள்ள மிகப் பெரிய கோயில் ஆகும். இக் கோயில் விமானமானது 55 மீட்டர்கள் உயரத்துடன் மிகப் பெரியதாகத் திகழ்கிறது. 25000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு சிற்பங்களால் அழகூட்டப்பட்ட உயர்ந்த மதில்களால் சூழப்பட்ட இக் கோயிலின் பரந்த உட்பகுதியில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட சிறிய கோயில்களிடையே இப் பெரிய விமானம் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
கோயிலின் முதன்மை வாயில் கிழக்கிலும் மற்ற வாயில்கள் வடக்கு, தெற்கில் உள்ளன. கோயிலில் உள்ள 54 மீட்டர் உயரமுள்ள துயூலாவும் (பிரதான கோபுரம்) 29 மீட்டர் உயரமுள்ள ஜக்மோகனாவின் மேலுள்ள பிரமிட் கோபுரமும் (பீதா துயூலா) முழுவதும் சிற்பங்களால் அணி செய்யப்பட்டுள்ளன.
லிங்கராஜர் கோயிலானது கருவறை, வேள்வி மண்டபம், கோக மண்டபம், நாட்டிய சாலை ஆகிய நான்கு பகுதிகளாகப் பிரிக்கும் விதத்தில் உள்ளது. கருவறையின் ஒரு பக்கக் கதவில் சூலமும் மற்றதில் சக்கரமும் உள்ளன. கருவறையிலுள்ள பிரம்மாண்ட சிவலிங்கமானது சுயம்புலிங்கம் எனப்படுகிறது. இது ஹரிஹர ரூபம் என்கின்றனர். அதாவது திருமாலும் இந்த லிங்கத்தில் உறைந்திருப்பதாக நம்பிக்கை. அதனால் இங்கு அர்ச்சனைக்காக விற்கும் பூக்குடலையில் வில்வ தளங்களும் துளசி இலைகளும் சேர்ந்தே காணப்படுகின்றன. ஆலயம் கட்டி முடிக்கப்படும்போது கலிங்க நாட்டில் ஜகன்னாதர் பக்தியும் பரவத் தொடங்கியது. இந்த லிங்கத்திலேயே திருமாலும் எழுந்தருளி இருக்கிறார் என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
கோயில் வளாகத்தில் பார்வதி, கார்த்திகேயர், கணேசர் போன்ற தெய்வங்களுக்கும் தனித்தனியாக கோவில்கள் உள்ளன. கோயிலின் வெளிப் பிரகாரத்தில் சாவித்ரி மாதாவுக்கும் எமதர்மராஜாவுக்கு சன்னிதிகள் உள்ளன. கோயில் வளாகத்தில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் மிக உயரமான விமானங்கள் உள்ளன என்றாலும், தாரிணி தேவிக்கு மட்டும் தனி விமானம் கிடையாது. அவர் மரத்தின் கீழேதான் காட்சியளிக்கிறார்.
ஒட்டுமொத்த கோயிலையும் காண வசதியாக, கோயிலின் எல்லைப்புறச் சுவருக்கு அருகே ஓர் உயர்ந்த மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதால், பிற சமயங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் உட்பட இந்த மேடையின் மீது நின்று கோயிலைக் கண்டு களிக்கிறனர்.
இந்து புராணத்தின் படி, லிங்கராஜா கோயிலிலிருந்து தோன்றிய ஒரு நிலத்தடி நதி, பிந்துசாகர் குளத்தை நிரப்புகிறது (கடல் துளி என்று பொருள்). மேலும் இந்த நீர், உடல் மற்றும் ஆன்மீக நோய்களை குணப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. குளத்தில் இருந்து வரும் நீர் புனிதமாகக் கருதப்படுகிறது மற்றும் பண்டிகை சந்தர்ப்பங்களில் யாத்ரீகர்கள் புனித நீராடுகிறார்கள். திருவிழா தெய்வத்தின் உருவத்துடன், கோவிலின் ருகுண ரத யாத்திரை லிங்கராஜாவின் வருடாந்திர ரத யாத்திரையாகும்.
பங்குனி மாதத்தில், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும் முக்கிய திருவிழா சிவராத்திரி ஆகும். இந்தப் புனித நாளில் லிங்கராஜாவுக்கு சமர்ப்பிக்கும் வகையில் பக்தர்கள் முழு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். பக்தர்கள் இரவு முழுவதும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி பஜனை செய்கிறார்கள். கோயிலில் மகா தீபம் (ஒரு பெரிய விளக்கு) ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் பொதுவாக தங்கள் நோன்பை முடித்துக் கொள்கிறார்கள். இந்த திருவிழா லிங்கராஜா ஒரு அரக்கனைக் கொன்றதை நினைவுகூர்கிறது.
கோயிலின் பிரதான நுழைவாயிலின் வலதுபுறத்தில் அமைந்துள்ள ஒரு பாதை வழியாக பார்க்கும் தளத்தையும் கோயிலின் பின்புறத்தையும் அடையலாம். கோயிலின் புனிதத்தன்மை, நாய்களை அனுமதிக்காதது, குளிக்காமல் வரும் பார்வையாளர்கள், முந்தைய 12 நாட்களில் பிறப்பு அல்லது மரணத்தை சந்தித்த குடும்பங்கள் மற்றும் மாதவிடாய் காலங்களில் இருக்கும் பெண்கள் ஆகியோரை கோயிலுக்குள் அனுமதிக்காமல் செய்வதன் மூலம் காக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல் ஏற்பட்டால், கோயிலில் ஒரு சுத்திகரிப்பு சடங்கு நடக்கும். அப்போது பிரசாதம் படைக்கப்பட்டு பின்னர் பிரசாதம் கிணற்றில் கொட்டப்படுகிறது.