
முனைவர் கு.வை.பாலசுப்பிரமனியன்
இன்று அகமதாபாத்தில் இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறுகிறது. பாரதமே நமது அணி வெல்லவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. விளையாட்டில் வெற்றி தோல்விகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இன்றைய தினம் நன்றாக விளையாடுகின்ற அணி வெற்றியைப் பெறும். இருந்தாலும் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒன்பது லீக் போட்டிகள் ஒரு அரையிறுதி என பத்து ஆட்டங்களில் இந்திய அணி வாகை சூடியிருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்கள் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் வென்றிருக்கிறது. குறிப்பாக இந்திய அணியுடனான சென்னை ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. அந்த அணி தோற்ற இரண்டாவது அணி தென் ஆப்பிரிக்க அணி. ஆனால் அரையிறுதி ஆட்டத்தில் அந்த அணியை ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கிறது.
இந்திய அணியின் ரோஹித் ஷர்மா உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவரை 44 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 2332 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 209; 8 சதங்கள்; 9 அரை சதங்கள். விராட் கோலி இதுவரை 46 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 2313 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 123; 8 சதங்கள்; 13 அரை சதங்கள். இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஜதேஜா என வரிசையாக ஏழு பேட்டர்களும் சிறப்பாக ஆடிவருகிறார்கள். குறிப்பாக முதல் பத்து ஓவர் பவர் ப்ளேயில் சராசரியாக 80 ரன் எடுக்கின்றனர். அதேபோல கடைசி 10 ஓவர் பவர்ப்ளேயில் சராசரியாக 90 ரன் எடுக்கின்றனர்.
பந்துவீச்சில் ஜதேஜா இதுவரை 40 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 37 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 5.27. முகம்மது ஷமி இதுவரை 23 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 38 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 6.04. பும்ரா இதுவரை 20 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 28 விக்கட்டுகள் எடுத்திருக்கிறார்; கொடுத்துள்ள ரன் ரேட் 5.28.
அதே சமயம் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இதுவரை 30 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 941 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 201; 3 சதங்கள்; 2 அரை சதங்கள். வார்னர் இதுவரை 25 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 1215 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 128; 3 சதங்கள்; 9 அரை சதங்கள். ஸ்மித் இதுவரை 24 ஆட்டங்கள் ஆடியிருக்கிறார்; 1306 ரன் அடித்திருக்கிறார்; அதிக பட்ச ஸ்கோர் 149; 5 சதங்கள்; 6 அரை சதங்கள்.
பந்து வீச்சில் ஆடம் ஜாம்பா 34 விக்கட்டுகள், ரன் ரேட் 5.67. ஸ்டார்க் 27 விக்கட்டுகள்; 6.02 ரன் ரேட். கம்மின்ஸ் 26 விக்கட்; ரன்ரேட் 5.24.
எனவே புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் ரோஹித் ஷர்மாவின் தலமையில் விளையாடும் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்; இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.