திரிபுராவில் கம்யூ., கட்சியை வீழ்த்தி பாஜக., ஆட்சி அமைக்கும்!

இந்தியா சற்றுமுன்

திரிபுராவில் நடந்து முடிந்த தேர்தலில், மாபெரும் வெற்றியை நோக்கி பா.ஜ.க முன்னேறும் என்று தேர்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகள் கூறுகின்றன.

நடந்து முடிந்த மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் 2 மாநிலங்களில் ஆட்சியைக் கைப்பற்றும் என எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், மற்ற இரு மாநிலங்களிலும் கணிசமான அளவு இடங்களையும் வாக்கு வங்கியையும் காங்கிரஸ் இழக்கும் என்றும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. மார்ச் 3ஆம் தேதி, 3 மாநிலங்களுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

கடந்த 18ம் தேதி திரிபுரா மாநிலத்தின் 59 சட்டமன்ற இடங்களுக்கான தேர்தல் நடந்த நிலையில், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் தலா 59 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்தது.

திரிபுராவில்…

திரிபுரா மாநிலத்தில், பா.ஜ – ஐபிஎஃப்டி கூட்டணி 35 முதல் 45 இடங்களை வெல்லும் என ஜன்கிபாத்-நியூஸ்எக்ஸ் எக்சிட் போல் கருத்துக்கணிப்பும், 44 முதல் 50 இடங்களை வெல்லும் என ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பும்  தெரிவிக்கின்றன. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 14-23 இடங்களையே வெல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரம், சிவோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி 26-34 இடங்களை வெல்லும் என்றும், பா.ஜ.க கூட்டணி 24-32 இடங்களை வெல்லும் எனவும் கூறியுள்ளது.

மேகாலயாவில்…

மேகாலயா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை தேசிய மக்கள் கட்சி வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியில் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருந்தாலும், சட்டமன்றத் தேர்தலில் இக் கட்சி தனியாகவே போட்டியிடுகிறது.

ஜன்கிபாத்-நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் என்பிபி 23-27 இடங்களையும், பா.ஜ.க 8-12 இடங்களையும், காங்கிரஸ் 13-17 இடங்களையும் வெல்லும் என அறிவித்தது.  சிவோட்டர், காங்கிரஸ் 13-19 இடங்களையும், என்பிபி 17-23 இடங்களையும், பா.ஜ.க 4-8 இடங்களையும் வெல்லும் என்றும் கூறியுள்ளது.

நாகலாந்தில்…

நாகலாந்து மாநிலத்தில், பா.ஜ.க – தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி (NDPP)யின் கூட்டணி, 27-32 இடங்களை வெல்லும் என்றும், ஆளும் நாகலாந்து மக்கள் கட்சி (NPF) 20-25 இடங்களை வெல்லும் என்றும் ஜன்கிபாத்-நியூஸ்எக்ஸ் முடிவுகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.